WWE-ல் 90 கிட்ஸின் ஃபேவரைட்டாக இருந்தவர் அண்டர்டேக்கர். இவர் ரிங்கில் களமிறங்கினாலே நாம் அனைவரும் துள்ளி குதித்து ரசித்து பார்ப்போம். WWE-ல் இருந்து ஒய்வு பெற்ற அவர் ஹிந்தியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பிக்பாஸ் டிரெண்டு அனைத்து மொழிகளிலும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான வீடுகளில் இரவு 10:30 மணிக்குப் பிறகு டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான ரியாலிட்டி ஷோ இதுவே. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் இது ஒளிபரப்பாகிறது. தமிழில் பிக்பாஸ் எவ்வளவு பிரபலமோ, அதைவிட ஹிந்தியில் மிகவும் பிரபலம்.
இந்த நிலையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கி தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த சீசன் தொடங்கி இன்னும் ஒரு வாரமே ஆகவில்லை. ஆனால் இப்போது Wild Card Entry குறித்து பேச்சுகள் கிளம்பி வருகின்றன. அதிலும் 90 கிட்ஸுக்கு பிடித்த அண்டர்டேக்கர் இதில் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.

ஹிந்தி பிக்பாஸ்க்கு இது புதிதல்ல. ஏற்கெனவே WWE-யின் முக்கிய வீரர் கிரேட் காலி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு வாரம் பங்கேற்றார். அதற்காக அவருக்கு சம்பளமாக 50 லட்சம் வழங்கப்பட்டது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க இப்படிப்பட்ட முக்கியமான போட்டியாளர்களை அழைப்பது வழக்கம் தான்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 15 போட்டியாளர்கள் உள்ளனர். அவர்களைத் தவிர்த்து 3 Wild Card Entry என மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்பர். இதில் Wild Card Entry-யாக தான் அண்டர்டேக்கர் வரக்கூடும் என்கின்றனர். வந்தால் அவர் 1 வாரம் அல்லது அதிகபட்சம் 10 நாட்கள் வீட்டில் இருப்பார் என்றும், அனைத்து மொழிகளின் பிக்பாஸ் வரலாற்றிலும் அதிக சம்பளம் பெறும் போட்டியாளராக இருப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் ஹிந்தி பிக்பாஸ் TRP அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








