ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்க தாக்குதலை நடத்தியதையடுத்து ஹோர்மோஸ் ஜலசந்தியை முடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளை உலகத்தின் கச்சா எண்ணெய் ஊற்று எனலாம். உலகின் எண்ணெய் தேவையில் 55 முதல் 57 சதவீதத்தை இவை பூர்த்தி செய்கின்றன. இந்த எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் பெர்சியன் வளைகுடாவில் உள்ள ஹோர்மோஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது.
ஈரான், ஈராக், குவைத், பஹ்ரைன், கத்தார் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இவை அனைத்திற்கும் இடையில் இருப்பது பெர்சியன் வளைகுடா. இது ஓமன் வளைகுடாவுடன் இணையும் இடமே ஹோர்மோஸ் ஜலசந்தி. இந்த நாடுகளில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய், மற்ற நாடுகளுக்கு கடல் மார்க்கமாக செல்ல அரபிக்கடலை வந்து சேரவேண்டும். அதற்கு ஹோர்மோஸ் ஜலசந்தி வழியாகத்தான் செல்ல முடியும்.

ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணுசக்தி மையங்களை குறிவைத்து அமெரிக்கா நடத்திய தாக்குதலையடுத்து இந்த ஜலசந்தியை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம். இது இந்தியாவையும் பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
உலகிலேயே எரிபொருள் தேவைக்காக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதிலும் நுகர்வதிலும் இந்தியா மூன்றாவது பெரிய நாடாக இருக்கிறது. இந்தியா இறக்குமதி செய்வதில் 40 சதவீதம் கச்சா எண்ணெய், மற்றும் 50 சதவீதம் எரிவாயு இறக்குமதி ஆகியவற்றிற்கு இந்த ஜலசந்தியைத்தான் நம்பியுள்ளது.
கடந்த 2022 உக்ரைன் படையெடுப்பின்போது பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. அவை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்த நிலையில் ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்கு வழங்க முன் வந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்தியா, அதுவரை 1 சதவீதமே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்து வந்த கச்சா எண்ணெய் இறக்குமதியை, திடீரென 40 சதவீதமாக உயர்த்தியது.
இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெயில் 90 சதவீதத்தை இறக்குமதியை சார்ந்தே இருக்கிறது. இதில் ஹோர்மோஸ் ஜல சந்தி வழியாக இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெயின் அளவு கனிசமானது. என்றாலும் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்படும் சூழலில் ரஷியா, அமெரிக்கா, நைஜீரியா, அங்கோலா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதியை மேலும் அதிகரிப்பதன் மூலம் ஹோர்மோஸ் ஜலசந்தி மூடப்படுவதால் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட இந்தியா திட்டம் வைத்திருக்கிறது. எனவே இந்த ஜலசந்தியை மூடுவது இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் பெரிய அளவில் கச்சா எண்ணெய்க்கான தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அதே நேரத்தில் வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர் தீவிரமடைவது சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தக சங்கிலியை பாதிக்கலாம். இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை திடீரென உயரக் கூடும்.








