பொது

அதிகரிக்கும் பள்ளி இடைநிற்றல்.. UNESCO வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக UNESCO உலகளாவிய கல்வி கண்காணிப்புக்குழு (Global Education Monitoring) அறிக்கை வெளியிட்டுள்ளது. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்தில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் அமைப்பாக UNESCO இயங்கி வருகிறது. இந்த துறைகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆண்டுதோறும் UNESCO ஆய்வறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி செல்லாதோர் குறித்த ஆய்வறிக்கையை இப்போது UNESCO GEM வெளியிட்டுள்ளது. இவ்வமைப்பின் 2025 ஆம் அண்டிற்கான GEM அறிக்கையில் 2023ல் 13.9 கோடி சிறுவர்கள், 13.3 சிறுமிகள் உட்பட 27.2 கோடி பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மக்கள்தொகை, பள்ளி சேர்க்கை, வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தற்போதைய 2025 ஆம் ஆண்டிற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030ன் (Sustainable Development Goals) கீழ் அனைவருக்கும் தரமான மற்றும் சமமான கல்வியை வழங்குவதில் உலக நாடுகளின் தற்போதைய நிலை குறித்து, 9 அளவுகோல்களின் அடிப்படையில் UNESCO GEM குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, முதல்நிலை கல்வி, இணையப் பயன்பாடு, பாலின பாகுபாடு உட்பட 9 கருத்தினங்கள் தரமான மற்றும் சமமான கல்விக்கான அளவுகோலாக இருக்கின்றன.

6 முதல் 17 வயதிலானோரின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த 6 அண்டுகளில் 90 லட்சம் அதிகரித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஆரம்பக் கல்வியில் வேகமான வளர்ச்சியும், கீழ் இடைநிலைக் கல்வியில் மெதுவான வளர்ச்சியும் அடைந்துள்ளது. ஆனால், மேல் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. அதேபோல பள்ளிகளில் இணைய சேவை வழங்கப்படுவது குறித்த எந்த தகவலையும் இந்தியா சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 50% குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைக்கவில்லை என்றும், உலக அளவில் கல்வி வளர்ச்சியில் இந்த பகுதியே பின்தங்கி இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் இந்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் வங்கதேசம், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பள்ளிக்கு செல்லாதோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 2025-ல் ஆரம்பக் கல்விப் பயிலும் வயதை எட்டிய 7.8 கோடி குழந்தைகள் (11%), கீழ் இடைநிலைக் கல்வி பயிலும் வயதை எட்டிய 6.4 கோடி (15%), மேல் இடைநிலைக் கல்வி பயிலும் வயதை எட்டிய 13 கோடி (31%) குழந்தைகள் என மொத்தம் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளது.

SDG 2030ன் படி பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கையை இப்போதிருக்கும் 21 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைக்க உலக நாடுகள் இலக்கு நிர்ணயித்துள்ளன. இந்திய அரசு கல்விக்கென்று GDPயில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த GEM 2025ல் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கைகள், உண்மை நிலவரத்தைவிடக் குறைவாகவே இருக்கிறது என்று UNESCO தெரிவித்துள்ளது. மியான்மர், சோமாலியா, சூடான் உள்ளிட்ட 10 நாடுகளில் நிச்சயமாக 1.3 கோடிக்கும் அதிகமான குழந்தைகள், சிறார்கள், இளைஞர்கள் பள்ளி செல்லாமல் இருக்க வாய்ப்பிருப்பதாகவும், ஆனால் அதற்கான போதிய தரவுகள் கிடைக்கவில்லை என்றும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts