ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மதுபான கடையில் 802 மது பாட்டில்களை எலிகள் காலி செய்துவிட்டாதக மதுபான கடை ஊழியர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து புதிய மதுபானக் கொள்கை அமலாக உள்ளது. மதுபான கடைகள் ஒதுக்கீட்டை அரசு செய்து வந்த நிலையில், இனி ஆன்லைன் குலுக்கல் முறையில் ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மதுபான கையிருப்பு குறித்து கலால்துறை அதிகாரி ராம்லீலா ரவாணி தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில், 802 மதுபான பாட்டில்களின் விற்பனை கணக்கில் வராமல் இருந்ததால், அதுகுறித்து அக்கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது மதுபாட்டில்களின் மூடிகளில் ஓட்டைப்போட்டு மதுவை எலிகள் குடித்து விட்டதாக ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், எலி எப்படி ஓட்டை போட்டது என்று ஒரு ஊழியர் செய்துகாட்டியுள்ளார்.
அவர்களின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அந்த ஊழியர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால்,மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பிரதுல் ஷாத்தியோ, ”இதெல்லாம் ஊழலை மறைக்க அரசு நடத்தும் நாடகம். சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, முக்கிய குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். எலிகளையும் கைது செய்ய வேண்டும். எலிகள் மீது FIR போடுங்கள்” என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சை நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள்.









