பொது

டி20 உலககோப்பை மைதானத்திற்குள் விசில்.. விதிமுறைகள் சொல்வதென்ன?

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவிலும், இலங்கையிலும் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள்,சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மோதின.

இந்தப் போட்டியின் போது சேப்பாக்கம் மைதானத்திற்கு வரும் ரசிகர்களிடம் இருந்து “விசில்” பறிமுதல் செய்யப்பட்டது. விசில் எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மைதானத்தில் கூறப்பட்டது.

சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் விசில் எடுத்து செல்லாமா கூடாதா?

தவெகவின் ரியாக்‌ஷன்..

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்குள் விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டவுடன், ”இத்தனை ஆண்டுகளாக இல்லாத புது விதியாக, இப்போது சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் கொண்டு வர தடை விதித்திருக்கிறார்கள். ஏன்?” என்று தவெக தரப்பிலிருந்து பதிவு வெளியிடப்பட்டது.

த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், “சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் “விசில்” சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..! சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! ” என அவருடைய பாணியில் பதிவிட்டுள்ளார்.

தவெகவின் இந்த கருத்துக்கு, ”உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் இசைக்கருவிகளை ரசிகர்கள் மைதானத்திற்குள் கொண்டு செல்ல தடைவிதிப்பது வழக்கமான கட்டுப்பாடுகளில் ஒன்று. விசிலும் இசைக்கருவிகள் என்ற வகைமையில் வரும் ஒன்றுதான். 2003 உட்பட பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் கூட விசில் உள்ளிட்ட இசைக்கருவிகள் தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் போட்டியில் மைதானத்திற்குள் விசில் உள்ளிட்ட இசைக்கருவிகள் கொண்டு செல்லவதற்கு ஐசிசி தடை விதித்தது” என திமுக ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்தனர்.

ஆனால் உண்மை என்ன?

மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்தது. அதன்படி, “சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளே விசில் எடுத்து செல்ல தடை விதிக்கவேண்டும் என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்” என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

ஆனால் போலீசார் தடைவிதிக்க என்ன காரணம்? திமுகவிற்கு தவெக மீதான பயம் என பலர் கூறுகின்றனர். ஆனால் ஐசிசி விதிகளின்படி, அரசியல் கட்சிகள் சார்ந்த எந்த கொடியையொ, குறியீடுகளையோ எடுத்து செல்ல அனுமதி இல்லை. சமீபத்தில் தவெகவிற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கிய நிலையில், விசில் எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.ஆனால் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் இந்த தடை இல்லை எனத் தெரியவந்துள்ளது.

Related Posts