பொது

யார் அடுத்த DGP? தமிழக காவல் துறையில் முக்கிய மாற்றம்

தமிழக காவல் துறையை சிறப்பாக வழிநடத்தி வந்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால், வருகிற 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டுகள் காவல் துறையில் அவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

1990ல் UPSC-ல் வெற்றி பெற்று IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பின், தமிழக உளவுத்துறை ஐஜி, சென்னை மாநகர காவல் காவல் ஆணையர், தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையர் என முக்கிய பதவிகளை வகித்து, இருமுறை ஜனாதிபதி விருது பெற்ற பெருமை அவருக்கு உண்டு. ஆனால், சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் இந்த நேரத்தில், யார் அடுத்த DGP? என்ற கேள்வி எழுந்தது.

வரும் ஆக.31 ஆம் தேதியோடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், புதிய (பொறுப்பு) டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாகப்பட்டினத்தை பூர்விகமான வெங்கட்ராமன் (IPS – 1994), பி.ஏ. எகனாமிக்ஸ், எம்.ஏ. பொது நிர்வாகம் படித்தவர்.

தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் பட்டாசு விபத்துகள், தீ விபத்துகள் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், அரசு ஒரு புதுமையான முடிவு எடுத்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கே ஒரு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தீ விபத்துகளைத் தடுப்பதற்கான வழிமுறைகள், நவீன கருவிகள் வாங்கும் ஆலோசனைகள் என பல்வேறு பொறுப்புகளை ஏற்கும்.

அதிலும் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?

இந்த புதிய ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெறும் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நியமிக்கப்படுவார் என்ற தகவல் கசிந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆகஸ்ட் 30-ம் தேதி வெளிநாடு செல்லும் நிலையில், புதிய DGP, புதிய தீயணைப்பு ஆணையம் குறித்து அறிவிப்பு 30 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் ஒரே நாளில் வெளியாகப்போகிறது என அரசியல் மற்றும் காவல் துறையில் சலசலப்பு நிலவுகிறது.

Related Posts