சில தினங்களுக்கு முன் சென்னையில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரு சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்தது. இதற்கு காரணம் மேகவெடிப்பு என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இதேபோல் சமீபத்தில் ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ஜம்மு கஷ்மீர் என பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்கும் மேகவெடிப்பே காரணமாக சொல்லப்பட்டது.
மேகவெடிப்பு என்றால் என்ன?
குறுகிய பரப்பளவில் குறுகிய நேரத்தில் அதிகனமழை பொழியும் நிகழ்வு மேகவெடிப்பு எனப்படுகிறது. உலக வானிலை அமைப்பின் வரையறையின்படி, ஒரு மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு என்றும், 50 மி.மீ மழை பதிவானால் அது மினி மேக வெடிப்பு என்றும் அறிவிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் மலைப்பகுதிகள், அதிக ஈரப்பதம் கொண்ட வளிமண்டல நிலை, மற்றும் திடீர் காற்றழுத்த மாற்றங்கள் நிகழும் சூழலில் தோன்றுகிறது. நீர் மிகுந்த கனமான மேகங்கள் உருவாகி நகராமல் ஒரே இடத்தில் குவிந்து, குறுகிய நேரத்தில் மிக கனமழையாக பொழிந்து, பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இதை கணிக்க முடியுமா?
மேகவெடிப்பை கணிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. மணிக்கு 1 செ.மீ மழை பெய்தால் மென்மையாக மழைப்பொழிவு, 1 முதல் 2 செ.மீ மழை பெய்தால் மிதமான மழை பொழிவு, 2 முதல் 3 செ.மீ மழை பெய்தால் பலத்த மழை பொழிவு, 3 முதல் 5 செ.மீ மழை பெய்தால் மிகப் பலத்த மழை பொழிவு, 5 முதல் 10 செ.மீ மழை பெய்தால் கனமழை அல்லது அடைமழை பொழிவு, 10 செ.மீ மேல் மழைபெய்தால் மேக வெடிப்பு பெருமழை என்று வானிலை ஆய்வு மையங்கள் கூறுகின்றன. மிக கனமழைக்கான எச்சரிக்கையாக ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட் போன்றவை அறிவிக்கப்படும். ஆனால், அவை எவ்வளவு மணிநேரத்தில் பெய்யும் என்பது குறித்து கணிப்பது கடினமானது . அதனால், கனமழை பொழியும் என்று சொல்லமுடியுமே தவிர, அது மேகவெடிப்பா என்பது குறித்து முன்பே கணிக்க முடியாது.
இந்த ஆண்டு என்ன நிலை?
இந்த ஆண்டு நாடு முழுவதிலும் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பொழிந்துள்ளது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் 743.1 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட 6% அதிகம். ஜூன் மாதத்தில் 111 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், இது இயல்பை விட 42% அதிகம். ஜூலை மாதத்தில் 237.4 மி.மீ அல்லது இயல்பை விட 13% அதிகம் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த அதிக மழைப் பொழிவு விவசாயத்திற்கும் நீர் ஆதாரங்களுக்கும் நல்லது என்றாலும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளன.









