கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பழச்சாறு, தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை உட்கொள்கின்றனர். இவற்றில் விலைக்குறைவாக இருப்பது தர்பூசணி பழங்கள்தான். கோடைகாலங்களில் சாலை ஓரங்களில் கீற்றுகளாக வெட்டப்பட்ட தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறும். இந்த நிலையில் சமீபத்தில் நிறத்துக்காகவும் சுவைக்காகவும் தர்பூசணி பழத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன திரவம் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாம் உண்ணும் காய்கறிகளிலும், பழங்களிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாகத் தொடர்ந்து பல புகார்கள் வந்துள்ளன. இவை காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் அல்லது பழங்களை பழுக்க வைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் காய்கறிகள் பழங்களை சேமித்து வைக்கும் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளிட்டவற்றை பலமுறை பறிமுதல் செய்து அழித்துள்ளனர். இந்த வகையில்தான் தற்போது தர்பூசணி பழத்தில் இனிப்பை அதிகரிக்கவும், தர்பூசணி சிவப்பாகத் தோன்றவும் எரித்ரோசின் என்ற ரசாயன திரவத்தை ஊசி மூலம் செலுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சதீஷ்குமார் முன் வைத்தார். இதனை கண்டறிவதற்கு ஒரு டிஷ்யூ பேப்பரை வெட்டப்பட்ட தர்பூசணி பழத்தின் மீது வைத்து தேய்த்தால் அது ஊசிபோடப்பட்ட பழமாக இருந்தால் அதன் நிறம் சிவப்பாக மாறும் என்றும் அப்படி இல்லை எனில் அதன் நிறம் மாறாது என்றும் அவர் செயல் விளக்கம் கொடுத்தார். இந்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக், டிஹைட்ரேஷன் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்க மருத்துவர்கள் தர்பூசணியை அதிகம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றனர். இது தர்பூசணி விற்பனையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் பன்னாட்டு குளிர்பானங்களின் விற்பனையை மந்தப்படுத்துகிறது. இதனால் தங்கள் வியாபாரத்தைப் பெருக்க நினைத்த நிறுவனங்கள் தர்பூசணியில் கலப்படம் உள்ளதாக வதந்தியைப் பரப்பியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உணவு பாதுகாப்புதுறை அதிகாரியின் செயல் விளக்க வீடியோ வெளியானது தர்பூசணி விற்பனையை குறைத்துள்ளதுடன், வெயிலிலிருந்து தப்பிக்கக் குளிர்பானங்களை நோக்கி மக்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், “இயற்கையாக விளையும் தர்பூசணி போன்ற பழங்களில் ரசாயனம் கலப்பதாக குளிர்பான நிறுவனங்கள் வதந்தி பரப்புகின்றன. விளையும் இடத்தில் ஆய்வு செய்யாமல், அதிகாரிகளும் தவறான தகவலை அளித்துள்ளனர். தர்பூசணி, ஏக்கருக்கு 15 முதல் 20 டன் விளைகிறது, ஒவ்வொரு பழத்திற்கும் ரசாயன ஊசி போடுவது சாத்தியமற்றது. எனவே ரசாயனம் கலப்பு என்பது முற்றிலும் வதந்திதான். இதனால், உணவு பாதுகாப்பு துறையினர், தர்பூசணி விளையும் நிலங்களில் ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை மக்களிடம் விளக்கி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். மேலும் குளிர்பான நிறுவனங்கள் சதிக்குத் துணை போகும் உணவு பாதுகாப்பு துறையின் அதிகாரி சதீஷ்குமார் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசுகையில், “தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட இயற்கையான பொருள். கோடைகாலத்தையொட்டி தர்பூசணி மற்றும் இளநீரின் விற்பனை தீவிரமடைந்துள்ளது. இதனால் நஷ்டமடையும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தவறான விதத்தில் பயன்படுத்தி இது போன்ற அவதூறுகளை செய்து வருகின்றன. இதற்கு தமிழ்நாடு அரசின் சில அதிகாரிகளும் துணை போகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகின்றது. செயற்கை குளிர்பானங்கள் மனிதனை நஞ்சாக்கக்கூடியது. ஆனால் அவற்றை ஆய்வு செய்ய இந்த அதிகாரிகள் முன்வருவதில்லை. மாறாக இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தர்பூசணியை இலகுவாக தடை செய்ய வீணான புரளியை விதைக்கிறார்கள். இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.









