சீனாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருவதற்கு இருந்த தடை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டிலிருந்து சீனர்கள் இந்தியாவிற்கு சுற்றுலா வர தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருநாட்டு எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக கொரோனா தொற்று அவசரநிலை காலம் முடிந்த பிறகும் இந்த தடை நீக்கப்படாமல் இருந்தது.

இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பல முறை பேச்சு வார்த்தை நடந்தது. ஆனாலும் தடை தொடர்ந்து வந்தது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சமீபத்தில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்து பேசினார்.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்கப்படுமென அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ”ஜூலை 24 முதல் இந்தியா செல்வதற்கு சீனர்கள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் ஆன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலை செய்துகொண்டிருந்த சீனாவை சேர்ந்த பல தொழில்நுட்ப வல்லுநர்கள், உள்நாட்டு பாதுகப்பு கருதி சமீபத்தில் சீனாவிற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், புதிதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியா வருவதற்கும் மறைமுக தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த விஷயத்தில் எதாவது புதிய முடிவுகள் எடுக்கப்பட்டிருகிறதா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.









