அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள், வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டுமென அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) உச்சி மாநாட்டில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார். அந்த உச்சி மாநாட்டில் பேசிய அவர், “நீண்ட காலமாக ‘உலகமயமாக்கல்’ என்ற பெயரில் அமெரிக்கர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அமெரிக்கா கொடுத்த சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு பல பெரிய நிறுவனங்கள் சீனாவில் தங்கள் தொழிற்சாலைகளை கட்டுகின்றன; வேலையில் இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்கர்கள் பலர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.
மேலும், “இங்கே தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அமெரிக்க மீது தேசப்பற்று கொண்டவர்களாக இருக்க வேண்டும். சிலிக்கான் வேலியில் (Silicon Valley) இருப்பவர்கள் அமெரிக்காவை முதன்மையாக கருதுங்கள். அதை நீங்கள் செய்தே ஆகவேண்டும். அதைமட்டும்தான் நாங்கள் கேட்கிறோம்” என்று தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுப்பது போலப் பேசினார்.

இந்த ஆண்டு மே மாதம், ஐ போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிளுக்கு இதேபோலொரு எச்சரிக்கையை டிரம்ப் விடுத்திருந்தார். அமெரிக்காவில் விற்கப்படும் ஐ போன்கள் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், இல்லாவிட்டால் அமெரிக்காவிற்கு ஆப்பிள் நிறுவனம் 25 சதவீதம் வரி செலுத்த நேரிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டிரம்ப் மறுபடியும் இது போல பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









