அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஒரு இனத்தை அடிமையாக்க அவர்களுடைய வரலாற்றை மறைத்தால் போதுமானது என சிலர் சொல்வதுண்டு. ஆனால் அடிமையாக இருந்த ஒரு இனத்தின் போராட்டத்தையும், வலியையும், வரலாற்றையும் மறைக்கும் வேலையை டிரம்ப் செய்வதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்க முழுவதும் இருக்கும் 30000க்கும் மேற்பட்ட தேசிய மியூசியம்களில் உள்ள கறுப்பின அடிமை முறை, அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, ஸ்மித்சோனியான் மியூசியமில் 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட “The Scourged Back” (கசையடிப்பட்ட முதுகு) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது. இந்த புகைப்படம் ஆரம்ப கால கேமராவில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் அமெரிக்காவில் கறுப்பர்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை காட்டிய சாட்சியமாக இருந்து வருகிறது. புகைப்படத்தில் இருக்கும் ‘பீட்டர்’ என்ற நபர், தான் அடிமையாக இருந்த லூசியானா தோட்டத்திலிருந்து தப்பித்து, 40 மைல் கடந்து ஒரு ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்ததாக சொல்லப்படுகிறது. அந்த தோட்டத்தில் அவர் அனுபவித்த கொடுமைகளையும், அன்றைய அமெரிக்காவின் நிலையையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் இருக்கிறது. அந்த புகைப்படத்தை நீக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த அருங்காட்சியகங்கள் எல்லாம் அமெரிக்காவின் பெருமையை கூறாமல், கடந்த காலக் கொடுமைகளை கூறுவதால் அவை நமக்கு தேவையில்லை என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அடிமைத்தனம், இனவெறி, பாலினப் பாகுபாடு, பழங்குடி மக்களை துன்புறுத்துதல் மற்றும் LGBQT உரிமைகள் தொடர்பான கண்காட்சிகள் மற்றும் தகவல்களை நீக்க உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு, ஒரு சிறந்த நாடு அதன் வரலாற்றை மறைக்காது என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.








