பொது

TNPSC குரூப் 1 தேர்வில் 25% பேர் ‘Absent’

தமிழகம் முழுவதும் நேற்று (15.06.2025) நடைபெற்ற TNPSC குரூப் 1 மற்றும் 1A தேர்வை 63,000 பேர் எழுதவில்லை என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட 70 பணிகளுக்கான இந்த முதல்நிலை தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியானது. குரூப் 1 தேர்வுக்கு 2.49 லட்சம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் நேற்று நடைபெற்ற தேர்வில் 63,000 பேர் தேர்வுக்கு வரவே இல்லை. இது மொத்த எண்ணிக்கையில் 25% ஆகும். இந்த எண்ணிக்கை அதிகம் என நீங்கள் நினைத்தால் அது சரி தான். ஆனால், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

2022-ஆம் ஆண்டில் 40% க்கும் அதிகமானவர்கள் தேர்வுக்கு வரவில்லை. இதேபோல் 2024-ஆம் ஆண்டு குரூப் 1 தேர்வுக்கு 32% க்கும் அதிகமானோர் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் TNPSC தேர்வுகளை எழுதுப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவருகிறது. அந்த அடிப்படையில் 2025-ஆம் ஆண்டில் தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கை 25%, இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, டின்பிஎஸ்சி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 6 மாதங்களாக தேர்வு விதிகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. OMR-ஐ எளிதாக பூர்த்தி செய்யும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்பு, விடைகள் A, B, C, D-வில் எத்தனை விடைகளுக்கு பதிலளித்தோம் என குறிப்பிட வேண்டும். இதற்கு கூடுதலான நேரம் தேவைப்பட்டது. தற்போது, அவர்கள் எத்தனை கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விட்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் மார்க் செய்ய வேண்டும்.

tnpsc

முன்பு 90 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது ஒருங்கிணைத்து 7 தேர்வுகளாக மட்டுமே நடத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் குழப்பத்தை தவிர்களாம். தற்போது நடைபெற்ற TNPSC குரூப் 1 மற்றும் 1A தேர்வுகளின் முடிவுகள் 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என TNPSC தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஆண்டாண்டு அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அவ்வப்போது நிரப்பி வருகிறது. 2024ல் 10,071 நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. 2025ல் – 10,227 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும் 12,236 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது.

முன்பு TNPSC அறிவிப்புகள் வெளியாகி தேர்வு எழுதி பல மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது, ஆனால் தற்பொழுது முடிவுகள் விரைவாக வருவதால் அதனை எழுத மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Related Posts