அம்மா சாப்பாடு ரெடியா… காலை பள்ளிக்கு செல்லும் பொழுது ஒவ்வொரு வீட்டிலும் கேட்கக்கூடிய குறல் இது. இந்தியாவில் பெண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3 1/2 மணி நேரம் சமையலறையில் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல வீடுகளில் சமையலறைக்குள் போதுமான வெளிச்சம் மற்றும் காற்று செல்லவும், அங்கு வெளியாகும் புகை வெளியேறவும் காற்றோட்டம் கிடையாது. இது பல நோய்களுக்கு காரணமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக ஆஸ்துமா வருகிறது. அதற்குக் காரணம் — அதிக நேரம் சமையலறையில் செலவிடுவதும், அடுப்பில் இருந்து வரும் புகையால் ஏற்படும் சுவாச நோய்களுமே. இந்த தகவல் ஒன்றும் நமக்கு புதிதல்ல; 2020-ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பற்ற சமையல் அறை காரணமாக ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறப்பதாக தெரிவித்துள்ளது. இவற்றில், 32% இதய நோய், 23% பக்கவாதம், 21% சுவாச நோய்கள், 19% மற்றும் 6% நுரையீரல் புற்றுநோய் ஆகியவை பாதிக்கப்படுகின்றன.
இதற்கு என்ன காரணம் என நீங்கள் கேட்பது புரிகிறது. நமது அனைவரின் வீட்டிலும் சமையலறையில் Gas Stove, Oven உள்ளிட்ட பொருட்களில் இருந்து வெளியாகும் Nitrogen dioxide, Carbon monoxide போன்ற வாயுக்கள் வெளியேறாமல் இருப்பதாலும், அதிக வெப்பநிலையில் எண்ணெயில் உணவை வறுக்கும் போது அதிக மாசுக்கள் வெளியேறுகின்றன. அதனை நீண்ட நாள் சுவாசிப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படலாம். சுவாச நோய்கள், தலைவலி, சோர்வு, கண்களில் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் மற்றும் அதிகரித்த ஒவ்வாமைகள் ஏற்படும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

இன்றும் நமது கிராமங்களில் விறகு அடுப்பில் சமைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதில் இருந்து Carbon dioxide, Nitrogen dioxide மற்றும் புகை அறைக்குள் வெளியிடப்படுகிறது. மேலும் அதிக வெப்பமான வானிலை காரணமாக நீரிழப்பு மற்றும் Hormone Imbalance போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நீண்ட நேரம் நின்று சமைப்பது கீழ் முதுகு மற்றும் குதிகால் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதனை எல்லாம் சரிசெய்ய, சமையல் புகை மற்றும் வாயுக்கள் வெளியேற கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைத்திருக்க வேண்டும். இப்போது கட்டப்படும் வீடுகளில் Chimney மற்றும் Exhaust fan பொருத்தி வருகின்றனர். ஆனால் இதனை அனைத்து விடுகளிலும் பொருத்துவதும், அவ்வப்போது சரிசெய்வதும் அவசியம்.









