கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்தார். அதில், ரஷ்யா அதிபர் புதின் விரைவில் இறந்துவிடுவார் என தெரிவித்தார். புதினுக்கு உடலில் பல நோய்கள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக, உயிரைக் கொல்லும் நோய்களில் ஒன்றான புற்றுநோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புதினுக்கு மட்டுமல்ல, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் புற்றுநோயுள்ளது. இவ்வாறு உலகளவில் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவ உலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ரஷ்யா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோயால் வருடந்தோறும் பலர் இறந்து வருகின்றனர். இதற்கான தீர்வு இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை. இதை கட்டுப்படுத்த வேண்டிய செலவும் அதிகமாதலால் பல உயிர்கள் பலியாகி வருகின்றன.
இதனால், ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியின் மூலம், புதினின் உயிரை மட்டுமல்ல, அனைவரின் உயிரையும் காக்கும் வகையில் புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ (mRNA) தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். அரசு ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இது சந்தையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி ‘என்ட்ரோமிக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. மேலும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மனிதர்களிடமும் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இது 100 சதவீதம் புற்றுநோய் கட்டியின் அளவை குறைத்து, கட்டி மீண்டும் வளர்வதைத் தடுக்கும் திறன் கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.









