தங்கம் விலை கடந்த மாதம் வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் எகிறத் தொடங்கியது. அந்த வகையில் டிசம்பர் 15-ந்தேதி பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இடையில் சற்று இறக்கம் கண்டது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 22) ஒரே நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.1,360-ம் அதிகரித்து, ரூ.1,00,560-க்கும் விற்பனையானது
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 23) சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம்..!
தங்க நகையின் விலை திடீரென உயர்வதும், பின்னர்த் திடீரெனக் குறைவதுமாக உள்ளது. நம்மவர்கள் தங்களின் பல்வேறு வகையான பணத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய அவர்களின் தங்க நகைகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள்.
ரூ.3.37 லட்சம் கோடிக்கு தங்க நகை அடமானம்..!
வங்கிகளில் நகையை அடகு வைத்து வாங்கப்பட்ட கடன் தொகை கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.10 லட்சம் கோடியாக இருந்தது.
இது நடப்பு 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் ரூ.3.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 40% முதல் 45% நகைக் கடன்களை 31 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் குடும்பத் தேவைக்காக வாங்கி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கத்தின் விலை சரியும் போது, வாங்கிய கடன் தொகை என்பது அடகு வைக்கப்பட்ட நகையின் மதிப்பை விட அதிகமாக
இருக்கிறது. இதுபோன்ற காலக் கட்டத்தில் நகைக் கடனுக்கான தொகையைச் செலுத்துவதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.
தங்கத்தின் விலையை விடக் கடன் தொகை அதிகமாக இருப்பதால், நகையைத் திருப்பாமல், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அப்படியே விட்டுவிடுகிறார்கள்.
இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கவலை தெரிவித்திருக்கிறது.
நகைக் கடன் மீதான இடர் மேலாண்மை (Risk Management) அதிகரித்துள்ளதால் தங்க நகைகளின் மீது வழங்கப்படும் கடன் தொகையைக் குறைத்து வழங்க RBI வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எவ்வளவு மதிப்புக்கு கடன் கிடைக்கும்?
தற்போது, நகைகள் அடகு வைக்கும்போது தங்கத்தின் மதிப்பில் சுமார் 70% வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில் தங்க நகையின் மதிப்பில் 60% முதல் 65% வரை வுக்கு மட்டுமே கடன் வழங்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
எவ்வளவு மதிப்புக்கு கடன் வாங்கலாம்?
கடன் வாங்குபவரும் அளவோடு கடன் வாங்கினால்தான் நகையைத் திரும்ப வாங்க வேண்டும் என்கிற எண்ணம் வரும். மேலும், விலை வீழ்ச்சியால் தங்கத்தின் மதிப்பை விடக் கடனின் மதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வித்தியாசப்படும் தொகையைக் கடன் வாங்கியவர் கட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கேட்கும். இது கடன் வாங்கியவருக்கு நிதிச் சிக்கலை ஏற்படுத்தும்
மேலும் RBI-ன் புதிய விதிமுறையின்படி, ‘’ ஓராண்டுக்குள் தங்க நகை அடமானத்தை மீட்க வேண்டும். மீண்டும் அடமானம் வைக்க வேண்டும் என்றால், தங்க நகையை திருப்பி விட்டுத்தான் மீண்டும் வைக்க வேண்டும். அதிக தொகைக்கு கடன் வாங்கி இருந்தால், அதிக தொகையை புரட்டுவது கஷ்டமாக இருக்கும். எனவே, சுமார் 50% மதிப்புக்கு மட்டுமே தங்கத்தை அடமானம் வைத்து கடன் பெறுவது பல்வேறு வகையில் நல்லது.

-ஆர். வெங்கடேஷ், நிறுவனர், GuruRam Financial Services Pvt Ltd









