வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்த நாட்டின் நெடுங்கால பிரச்சனைகளில் ஒன்று. பலருக்கு வேலை கிடைத்தாலும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை. இது போன்ற சூழலில் படித்து முடித்து விட்டோ, படிப்பை பாதியில் கைவிட்டுவிட்டோ வேலையை தேடும் இக்கால இளைஞர்களுக்கு கைகொடுப்பது டுவீலர் டேக்ஸி ஓட்டுநர் பணியும், டெலிவரி பாய் பணியும்தான். ஒரு மொபைல் போனும் ஒரு பைக்கும் இருந்தால் போதும் — Rapido, Swiggy, Zomato, OLA, Uber போன்ற ஆப்களில் பதிவு செய்து எளிதில் சம்பாதிக்க முடியும். பிடித்த நேரத்தில் வேலை செய்யலாம். யாரையும் எதிர்நோக்க வேண்டியதில்லை, யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. சிலர் படித்துக்கொண்டே கூட இதுபோன்ற வேலைகளை பகுதி நேரமாக செய்துவருகின்றனர். சிலர் அலுவலக வேலை நேரம் போக மீதமுள்ள நேரத்தில் பைக் டாக்ஸி, டெலிவரி பாயாக வேலை செய்கின்றனர்.
gig பணியாளர்கள்?
இப்படி உணவு அல்லது பிற பொருட்களை டெலிவரி செய்வது, டூவீலர் உள்ளிட்ட டாக்ஸிகளை ஓட்டுவது, பிற Freelance பணிகள் இவற்றை செய்யும் அனைவரும் gig பணியாளர்கள் என வகைபடுத்தப் படுகின்றனர். சமீபத்திய ஆய்வின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் gig பொருளாதாரம் 23.5 மில்லியன் டாலரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 2.5 லட்சம் முதல் 4.5 லட்சம் வரையிலான gig பணியாளர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. gig பணியாளர்களுக்கு, எப்போது, எங்கு, எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்பதை தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. இதனால் பலர் தங்கள் நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தி நிதி தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள். மேலும், குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுவதற்கும் வாய்ப்பு கிடைப்பதாக கூறப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் ஒரு Freelance Graphic Designer ஆக இருந்தால், உங்கள் வாடிக்கையாளர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதற்கேற்ப வேலை நேரத்தையும் முடிவு செய்யலாம். இதுமட்டுமின்றி பல்வேறு வாய்ப்புகள் உண்டு, அதே நேரத்தில் உணவு டெலிவர் ஊழியராக பதிவு செய்து சம்பாதிக்கலாம், Peak Hour-ஸில் டாக்ஸியும் ஓட்டலாம். இப்படி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
எதிர்நோக்கும் சவால்கள்:
gig பணியாளர்களுக்கு நிலையான அல்லது குறைந்தபட்ச ஊதியம் என எதுவும் இல்லை. ஊதியத்துடன் கூடிய விடுப்பு, PF, காப்பீடு என நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. அதிகரித்து வரும் காலநிலை மாற்றம் காரணமாக டெலிவரி ஊழியர்கள் வெயில் மழை பாராமல் நிதி பற்றாக்குறை காரணமாக சில நேரங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தற்போது நிறைய பெண்களும் கூட gig பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் gig பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் மட்டுமே வேலை செய்கிறார்கள் என்பது பல ஆய்வுகளில் தெரிவிக்கின்றன.
இணையத் தொழிலாளர் கூடம்

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, சென்னை மாநகராட்சி ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து, டெலிவரி பணியாளர்களுக்காக பல ஏசி ஓய்வு இடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஓய்வு இடத்தைப் பயன்படுத்துபவர்கள் யூனிஃபார்ம் அணிந்திருக்க வேண்டும், உள்ளே நுழையும் போது பதிவு செய்ய வேண்டும், இது 24 மணி நேரமும் இயங்கும். இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் gig பணியாளர்களுக்குக் கழிப்பறை, குளிர்சாதன ஓய்வறை, சார்ஜிங் பாயிண்ட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய இணையத் தொழிலாளர் கூடம் (Lounge) சென்னை அண்ணா நகர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு style” என தெரிவித்துள்ளார். இதுமட்டுமன்றி, இந்த திட்டத்தை தங்கள் மாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து பிற மாநில அதிகாரிகளும் ஆர்வம் காட்டி, விசாரித்து வருகின்றனர்.
கடமை யாருக்கு?
தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு gig பணியாளர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது வெயிலிலும் மழையிலும் வாடும் gig பணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருப்பதாகவும், மேலும் பல இடங்களில் இது போன்ற இணைய தொழிலாளர் கூடத்தினை தமிழ்நாடு அரசு அமைக்க முன்வர வேண்டும் என்ற குரல்கள் எழுகின்றன.
ஆனாலும் சமூக ஊடகங்களில் சிலர் இதனை விமர்சித்தும் வருகின்றனர். OLA, Uber, Rapido போன்ற நிறுவனங்கள், இத்தொழிலாளர்களின் நலனை பொருட்படுத்தாமல் 20% முதல் 30% வரை கமிஷன் எடுத்து, தங்களுடைய லாபத்தில் மட்டுமே கவனமாக உள்ளன. உணவு கொண்டு செல்லவோ, பைக் டக்ஸி மூலம் பயணிகளை அழைத்துச் செல்லவோ, இந்த பணம் முழுமையாக அவர்களின் உடலுழைப்புக்கே போதுமானதாக இருக்கிறது. அதிலும் பெரும்பங்கு பெட்ரோலுக்கே செலவாகிறது. இந்த பணியாளர்கள் சொந்த பணத்தில் வாங்கிய வாகனத்தையே இந்த நிறுவனங்களின் தேவைக்கு பயன்படுத்துகின்றனர். அதுவும் அவ்வப்போது பழுதாகி போகும். அதை தங்கள் செலவிலேயே அவர்கள் சரிசெய்ய வேண்டியுள்ளது.
ஆனால் இவற்றை சரிசெய்ய, இப்பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், மருத்துவக் காப்பீடு, அடிப்படை வசதிகள் போன்றவற்றை செய்து தர அந்தந்த நிறுவனங்களை வலியுறுத்த வேண்டிய அரசு அதிலிருந்து விலகி இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி gig பணியாளர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அவ்வப்பொழுது முரண்பாடுகள் வாக்குவாதங்கள் வந்து கொண்டுதான் உள்ளன. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க கேரள அரசு ஒரு ஆன்லைன் டாக்ஸி செயலியை உருவாக்கியது. தமிழக அரசும் இது போன்ற செயலிகளை உருவாக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படுகின்றன.









