இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில், எல்லைகளில் படுதோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் இப்போது இந்தியாவில் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து சைபர் குற்றங்களில் இறங்கியுள்ளது. இந்தியாவை நோக்கி சமூக ஊடக சேனல்கள் மற்றும் மின்னஞ்சல் வழியாக டிஜிட்டல் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதாக பஞ்சாப் கிரைம் போலிசார் எச்சரிக்கின்றனர்.
இந்திய மக்களை முக்கிய இலக்குகளாகக் கொண்டு, “Dance of the Hillary” என்று அழைக்கப்படும் ஸ்பேம் மெயில், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற பிரபலமான தளங்கல் வழியாகப் பரவி வருகிறது. இதுகுறித்து பஞ்சாப் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு, தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவுறுத்தலில், கேள்விக்குரிய கிளிக் அல்லது தெரியாத எண்களில் இருந்து தகவல்கள் வந்தால் திறக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.

இந்த வைரஸ், உங்கள் மொபைல் மற்றும் லேப்டாப்களில் ஊடுருவி, முக்கியமான தகவல்களை திருடவும், உங்கள் டிவைஸை டிராக் செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் வங்கி தகவல், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட புகைப்படம் உள்ளிட்டவற்றை திருடும் என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், அது எளிய மக்களை மட்டுமல்ல, பெரும் நிறுவனங்களையும் தாக்க வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் தவறான தலைப்புச் செய்திகள், போலி எச்சரிக்கைகள் அல்லது கிளிக்பைட் பாணி ஊடகங்களைப் பயன்படுத்தி, வைரஸ் பிரச்சாரம் கவர்ச்சிகரமான உள்ளடக்கம் அல்லது முக்கியமான தகவல்தொடர்புகளாக மாறுவேடமிடுவதாகக் கருதப்படுகிறது.

“ஆபரேஷன் சிந்தூர்” நடைபெற்று கொண்டிருந்த அந்த பரபரப்பான நேரத்தில், இந்திய பாதுகாப்பு அதிகாரியாக வாட்ஸ்அப் எண்கள் மூலம் பத்திரிகையாளர்களையும் பொதுமக்களையும் தொடர்பு கொண்டு தகவல் திரட்ட முயல்வது போல் சைபர் தாக்குதல் நடத்த பட்டதாக ஊடகங்கள் தெரிவிகின்றன. இது மிகவும் தீவிரமான சைபர் தாக்குதலாக இருக்கக்கூடியதாகும் என பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த வகை தாக்குதல்களிலிருந்து தப்பிக்க, ஊக்கத்தொகை அல்லது முக்கிய செய்தி எனக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். தெரியாத தளங்களில் இருந்து தகவல்களை பதிவிறக்க வேண்டாம். வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்தி, இரண்டு காரணி அங்கீகாரத்தை இயக்கவும். சந்தேகமான செயல்கள் ஏற்பட்டால் உடனடியாக உள்ளூர் சைபர் பிரிவுக்கு புகார் செய்யவும். தற்போதைய அரசியல் பதட்ட சூழ்நிலையில், டிஜிட்டல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் மிகவும் அவசியமானவை.

சைபர் குற்றங்களை எதிர்கொள்ள அல்லது புகாரளிக்க, இந்திய அரசு இயக்கும் தேசிய சைபர் குற்றப்பிரிவு உதவி எண்: 1930 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் செய்யவும்









