பொது

2026: புத்தாண்டில் அவசியம் எடுக்க வேண்டிய 10 நிதித் தீர்மானங்கள்..!

புது வருடம் 2026: ஒவ்வொரு புத்தாண்டும் புதிய தொடக்கத்துக்கான வாய்ப்பு. குறிப்பாக நிதி வாழ்க்கையில் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துப் பின்பற்றினால், வாழ்க்கையை வளமான பாதையில் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் அவசியம் எடுக்க வேண்டிய 10 முக்கிய நிதித் தீர்மானங்களை இங்கே பார்ப்போம்.

1. வருமானம் – செலவு கணக்கு வைத்தல்:
ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம், எவ்வளவு செலவு என்று எழுதிக் கணக்கிடுங்கள்.

2. வரவுக்குள் செலவு:

வரவுக்குள் செலவு செய்வது ஒரு சிறிய விஷயமாக தோன்றலாம்; ஆனால், இது நிதி வெற்றியின் அடித்தளம்.தேவையற்ற செலவுகளை குறைத்து, அவசியமான செலவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.செலவுகள் கட்டுப்பாட்டில் இருந்தால், தேவையற்ற கடன்களைத் தவிர்க்க முடியும்.மேலும், சேமிப்பும் முதலீடும் தடையின்றி நடைபெறுவதால், உங்கள் நிதி இலக்குகள் வேகமாக, சுலபமாக நிறைவேறும்.

3. மருத்துவக் காப்பீடு:

நோய் அல்லது விபத்து நேரத்தில் தான் பலருக்கு மருத்துவக் காப்பீடு நினைவுக்கு வரும்.
ஏற்கெனவே, மருத்துவக் காப்பீடு இருந்தால், அதன் கவரேஜ் போதுமானதா என்பதைக் கவனியுங்கள். தேவையானால் டாப்-அப் பாலிசி மூலம் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறவும்.

இதுவரை மருத்துவக் காப்பீடு எடுக்கவில்லை என்றால், இந்தப் புத்தாண்டில் அதை செய்யுங்கள்.. இது, விபத்து பாதிப்பு, அவசர மருத்துவ செலவுகளிலிருந்து மட்டுமல்ல, குடும்பத்தை நிதி நெருக்கடியிலிருந்தும் பாதுகாக்கும். கடனிலிருந்தும் காப்பாற்றும்.

4. ஆயுள் ஆயுள் காப்பீடு

கும்பத்தை நிதி ரீதியாக பாதுகாக்கும் முக்கிய கவசம் ஆயுள் காப்பீடு (Life Insurance) பாலிசியை இதுவரை எடுக்கவில்லை என்றால், குறைந்த பிரீமியம் மற்றும் அதிக கவரேஜ் வழங்கும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை புத்தாண்டில் எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக, குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபரின் பெயரில் அவரின் ஆண்டு வருமானத்தை போல் 15 மடங்குக்கு கவரேஜ் இருக்கும்படி திட்டமிடுவது நல்லது. ஏற்கனவே டேர்ம் பிளான் இருந்தால், அதன் கவரேஜை உயர்த்துவதையும் இந்த ஆண்டின் தீர்மானமாகக் கொள்ளுங்கள்.

5. அவசர கால நிதி:

மருத்துவ அவசரம், வேலை இழப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் தனிப்பட்ட நிதிகளை கடுமையாக பாதிக்கக் கூடும். அதனால், அவசர தேவைகளுக்காக தனியே நிதி வைத்திருப்பது மிகவும் அவசியம். குடும்பத்தின் மாத செலவை போல சுமார் 6 மடங்கு தொகையை அவசர கால நிதியாக வைத்திருப்பது சிறந்தது. இந்தப் பணத்தை வங்கி சேமிப்பு கணக்கு, லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எளிதில் பணமாக்க கூடிய திட்டங்களில் வைத்திருப்பது அவசியமாகும்.

6. நிதி இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள்:

உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிதி இலக்குகளை அடையாளம் காணுங்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, பிள்ளைகளின் திருமணம், சொந்த வீடு, பணி ஓய்வுக் காலம் போன்றவை முக்கியமானவையாகும்.

உதாரணமாக, சில ஆண்டுகளில் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான முன் பணம் (Down Payment) திரட்டும் திட்டத்தை 2026-ல் தொடங்குங்கள்.

7. அதிக வட்டி கடன்களை அடையுங்கள்..!

எந்த நிதி இலக்கையும் நிர்ணயிப்பதற்கு முன், உங்கள் தற்போதைய நிதி நிலைமை என்ன என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சொத்துகள் (சேமிப்பு, முதலீடு, நிலம், வீடு, தங்கம் /வெள்ளி போன்றவை) மற்றும் கடன்கள் (கிரெடிட் கார்டு, தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் முதலியவை) அனைத்தையும் பட்டியலிடுங்கள்.

அதிக வட்டியிலான கிரெடிட் கார்டு கடன் மற்றும் தனிநபர் கடன்கள் இருந்தால், அவற்றை முழுமையாக அடைக்க அல்லது குறைப்பதே 2026-ம் ஆண்டின் முக்கிய நிதித் தீர்மானமாக இருக்க வேண்டும்.

8. கிரெடிட் ஸ்கோர் கவனியுங்கள்:

இன்றைக்கு கிரெடிட் ஸ்கோர் என்பது மிக முக்கியமான நிதி அடையாளமாக மாறியுள்ளது.
சுமார் ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்கவும். இப்போது ஆண்டுக்கு சில முறை இலவசமாகவே பார்க்கும் வசதி உள்ளது.

கிரெடிட் ஸ்கோர் 750-க்கு மேல் இருந்தால், கடன்களை எளிதாகவும் குறைந்த வட்டியிலும் பெற முடியும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், அதை உயர்த்துவதற்கான நடவடிக்கையை 2026-ல் எடுங்கள்..

9. பணி ஓய்வுக் கால முதலீட்டை இளமையில் ஆரம்பியுங்கள்:

இன்றையக்கு பலருக்கும் பென்ஷன் இல்லை. இதனால், பணி ஓய்வுக் காலம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது.
இந்த நிலையைத் தவிர்க்க, வேலை பார்க்கும் ஆரம்பக் காலத்திலேயே ஓய்வுக் கால சேமிப்பை தொடங்குவது மிக முக்கியம்.பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12-13% வருமானம் கொடுக்க கூடியவை. அவற்றில் சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால் போதிய பணத்தை சேர்த்துவிடலாம்.

ஓய்வு காலத்துக்கான சரியான சேமிப்பு, எதிர்கால நிதி நிலைத் தன்மையை உறுதிப்படுத்தும்.

10. நிதி அறிவை வளர்த்துக்கொள்ளுதல்

வருமான வரி, முதலீடு, சந்தை நிலவரம் பற்றி தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்.

நிறைவாக,

இந்தப் பத்து நிதித் தீர்மானங்களை புத்தாண்டில் எடுத்துத் தொடர்ந்து செயல்படுத்தினால், உங்கள் நிதி வாழ்க்கை மட்டும் அல்ல—முழு வாழ்க்கையும் வளமானதாக மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

 

ஆர். வெங்கடேஷ்
நிறுவனர் – www.gururamfinancialservices.com

Related Posts