வணிகம்

வேலூரில் மினி டைடல் பார்க்! 600 பேருக்கு வேலை வாய்ப்பு!

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், வேலூரில் ரூ.32 கோடி செலவில் வேலூரில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (5.11.2025) திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் 600 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் மினி டைடல் பூங்காவினை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள AGS Health care நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையை முதலமைச்சர் வழங்கினார்.

இந்த மினி டைடல் பூங்காக்கள் மூலம் வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்துவரும் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்புகள் ஏற்படுவதுடன் அப்பகுதிகள் சமூக-பொருளாதார வளர்ச்சி பெறவும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மேம்படவும் வழிவகுக்கும் என முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி. அருண் ராய் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts