பொது

அன்று முதல் இன்றுவரை… விமான விபத்தில் பலியான முக்கிய புள்ளிகள்..!

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித்பவார் சென்ற விமானம்
விபத்துக்குள்ளானத்தில் இன்று அவர் உயிரிழந்தார். இதேபோல பல முக்கிய புள்ளிகள் விமான விபத்தில் கடந்த காலங்களில் உயிரிழந்துள்ளனர்.

ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களில் உள்ள மவுண்ட் பிளாங்கில், 1966-ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில், இந்தியாவின் முன்னோடி அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா உயிரிழந்தார்.

1973-ம் ஆண்டு மே 31-ம் தேதி, டெல்லியில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் பயணித்த முன்னாள் எம்.பி. சுரேந்திர மோகன் குமாரமங்கலம் உயிரிழந்தார். இவர் இந்திரா காந்தி அமைச்சரவையில் 1971-1973 வரை மத்திய உருக்கு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.  

டெல்லியில் 1980-ம் ஆண்டு, விமான சாகசத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கோர விபத்தில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் மகனும், ராஜீவ்காந்தியின் சகோதரருமான சஞ்சய் காந்தி உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மோசமான வானிலை காரணமாகத் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் ரெயில்வே அமைச்சருமான மாதவ்ராவ் சிந்தியா 2001-ம் ஆண்டு உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பெல் ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில், பாராளுமன்றத்தின் 12-வது சபாநாயகராக இருந்த GMC பாலயோகி 2002-ம் ஆண்டு மரணமடைந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு ஹெலிகாப்டரில் தனது சகோதரருடன் பயணம் செய்த நடிகை சவுந்தர்யா 2004 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். தனது சகோதரர் அமர்நாத் உடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக பெங்களூரு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

2005-ம் ஆண்டு மார்ச் மாதம், உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், அரியானா முன்னாள் மின்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் மற்றும் முன்னாள் வேளாண் அமைச்சர் சுரேந்தர் சிங் ஆகியோர் பலியாகினர்.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் YSR ராஜசேகர ரெட்டி, நல்லமலா வனப்பகுதியில் 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில், 2011-ம் ஆண்டு ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், முன்னாள்முதல்வர் டோர்ஜி காண்டு பலியானார்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் வெலிங்​டனில் முப்​படை அதி​காரி​கள் பயிற்சி கல்​லூரியிலிருந்து குன்​னூர் வெலிங்​டன் ராணுவ பயிற்சி மையத்​துக்கு எம்​.ஐ. ரக ஹெலி​காப்​டரில் வந்​த​போது நஞ்​சப்பா சத்​திரம் கிராமம் அருகே, 2021 ஆம் ஆண்டு நடந்த விபத்​தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட14 பேர் உயிரிழந்தனர்.

2025-ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.

Related Posts