கோடியக்கரையில்… உதறிவிடப்பட்ட அப்பாவிகள்… விவகாரம் 5 மணி நேர அதிரடி ஆக்ஷன்! உத்தரவு போட்ட தலைமைச் செயலாளர்… நடவடிக்கை எடுத்த நாகை கலெக்டர்…
சமூக அவலங்களை எங்காவது பார்த்தால், உடனடியாக எங்களுக்கு தகவல் சொல்லுங்கள். விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்! என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அடிக்கடி கோட்டை நிருபர்களிடம் சொல்லுவார். அப்படி அவரது கவனத்துக்கு நேரடியாக கொண்டு போகப்படும் மக்கள் பிரச்னைகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பது அன்றாடம் நடக்கிறது. ஜூலை 3ஆம் தேதியன்று மதியம் மணி…2. சென்னை தலைமைச்செயலகம். தலைமைச்செயலாளர் அறை.. அவரிடம், மனநோயாளிகள், வீடுகளில் உதறிவிடப்படும் நோயாளிகள், வயதான முதியவர்கள்……இப்படியான அப்பாவி மனிதர்களை கோடியக்கரை பகுதியில் கொண்டுவந்து தவிக்க விட்டுப்போகிறார்கள். நேற்று (ஜூலை 3) கூட எங்கள் கோத்தாரி டிஜிட்டல் டீம் கோடியக்கரை பகுதியில் ஆய்வு நடத்தியபோது, ஒரு சில அப்பாவிகளை நேரில் கண்டு காட்சிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை வேதாரணியம் டூ கோடியக்கரை இடையான பகுதிகளில் சுற்றித்திரிந்த சுமார் ஏழு பேர்களை நேரில் கண்டிருக்கிறார்கள். இவர்களைப் போன்ற அப்பாவிகளின் பரிதாபகர நிலையை அன்றாடம் பார்க்கும் வேதாரணிய மக்கள் வேதனை கொள்கிறார்கள். சில தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்துகொண்டிருப்பது தனிக்கதை. இந்தப் பிரச்னைக்கு தீர்வே கிடையாதா? என்று புலம்புகிறார்கள். நீங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். உடனே தலைமைச் செயலாளர், ”அப்படியா?…ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறதே?” என்று கேட்டுக்கொண்டே, அருகிலிருந்த போனில் நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷை அழைத்தார். நாம் சொன்ன தகவல்களை சொல்லி, எந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவுகளை பிறப்பித்தார். அடுத்து பரபரப்பான நடவடிக்கைகள் அரங்கேறத் துவங்கின. இதே நேரம்… வேதாரணியம் ஏரியாவில் நமது கோத்தாரி டிஜிட்டல் டீம் வேறு பக்கம் ஆய்வில் தீவிரமாக இருக்க.. இன்னொரு பக்கம் நாகை மாவட்ட கலெக்டரின் பட்டாளம் களம் இறங்கியது.

என்னதான் பிரச்சினை என்கிறீர்களா?
அதற்கு முன், ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்
நாகை மாவட்டம் வேதாரணியம் ஏரியாவை அடுத்துள்ளது கோடியக்கரை. இந்திய வரைபடத்தின் தென் கிழக்கு முனையில் உள்ள இந்த கடற்கரை பகுதி. வேதாரணியம் ஊரிலிருந்து கோடியக்கரை கடற்கரை வரை சுமார் 10 கி.மீ. தூரம் இருபுறமும் காடுகள். அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதி என்று கூட சொல்லலாம். இங்கு யாராவது விவரம் தெரியாத மனிதர் வந்தால்… ஒருபுறம் காடுகள். எதிர்முனையில் கடற்கரை முனையம். அங்கிருந்து வேதாரணியம் ஊர் பக்கம் வருவது ரொம்ப சிரமம். இங்கு உப்பளங்கள் அதிகம் உள்ளன. வடமாநிலங்களில் இருந்து இந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி உப்பு ஏற்ற காலியான லோடு லாரிகள் வந்து போவதுண்டு. இதை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் சிலர், வடமாநிலங்களைச் சேர்ந்த அப்பாவிகளை அவர்களின் குடும்பத்தினர் இங்கு நாடு கடத்தி விடுகிறார்கள். வேதாரணியம் பக்கம் போகும் ஒருசில லாரிகளின் டிரைவர்களுக்கு கையில் சம்திங்கை கொடுத்து அப்பாவிகளை அந்த குறிப்பிட்ட லாரியில் ஏற்றி விடுகிறார்கள். அப்படி ஏற்றிவரப்படும் அப்பாவிகளை கோடியக்கரை பகுதியில் இறக்கிவிட்டுப் போய்விடுகிறார்கள் லாரி டிரைவர்கள். இது மட்டுமல்ல! தமிழகத்தின் வெளிமாவட்டங்களில் இருந்துகூட சில சமயம் அப்பாவிகளை இங்கு கொண்டு வந்து விட்டுப்போவதுண்டு. கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள கோடியக்காடு பகுதிகளில் நடமாடும் அப்பாவிகள் சில சமயங்களில் உணவு கிடைக்காமல் இறந்து போவதுண்டு. வேறு சிலரோ, வேதாரண்யம் பக்கம் கால்நடையாக வந்து விடுகிறார்கள். அப்படி வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடுத்து போர்டு ஒன்றை வைத்தார்கள். ஆனாலும், அவ்வப்போது அப்பாவிகளை இம்போர்ட் செய்வது என்னவோ?.. நடந்துகொண்டுதான் இருக்கிறது.
இனி, விஷயத்துக்கு வருவோம்!
வேதாரணியம் கோட்ட அலுவலர் திருமால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறையை சேர்ந்த அலுவலர் கார்த்திகேயன் மற்றும் செந்தில் முருகன்… இவர்களுடன் வேதாரணியம் தாசில்தார் வடிவழகன், கோடியக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்… ஆகியோருடன் Heed india என்கிற தொண்டு நிறுவன நிறுவனத்தை சேர்ந்த பாலாஜியும் உடன் சென்றிருக்கிறார்.
வேதாரணியத்தில் ஆரம்பித்து கோடியக்கரை வரையிலான பகுதிகளில் அப்பாவிகளின் நடமாட்டம்? இருக்கிறதா?.. என்று ரோந்து போயிருக்கிறார்கள். அங்கே தென்பட்ட இரண்டு அப்பாவிகளை முதல்கட்டமாக அடையாளம் கண்டு அவர்களை பத்திரமாக அழைத்து வந்து இரவு திருவாரூர் மனநலகாப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள். மற்றவர்கள் நடமாடுகிறார்களா? என்று தொடர்ந்து ரோந்து செல்லுவதாக கேள்விப்பட்டோம்!

நம்மிடம் நாகை கலெக்டர் ஆகாஷ் பேசும்போது,
”எங்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டவர்கள் இருவர். ஒருவர் – வேலூர் காரர். இன்னொருவர் – வடமாநிலத்தை சேர்ந்தவராம். இருவரும் திக்கித்திக்கி பேசுகிறார்கள். பார்க்கவே வேதனையாக இருக்கிறது. வீட்டில் உள்ளவர்களே இப்படி அப்பாவிகளை கொண்டு போய்விட காரணமாக இருக்கிறார்கள். இரண்டு வருடம் முன்பு, நூற்றுக்கணக்கில் அப்பாவிகள் வேதாரணியம் பகுதிகளில் நடமாடி கொண்டிருந்தார்களாம். அதன் பிறகு, படிப்படியாக கம்மி ஆகியிருக்கிறது. முழுவதுமாக ஓயவில்லை. அடிக்கடி எங்களது அதிகாரிகள் ரோந்து போய், தனித்து அலையும் அப்பாவிகளை அடையாளம் கண்டு, அவர்களை மீட்டு அரசு இல்லத்தில் சேர்க்கிறார்கள். இது போல, அப்பாவிகள் நடமாடுவது பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்தால் உடனே எங்களிடம் சொல்லுங்கள்..விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.

5 மணி நேரத்தில் விரைந்து நடவடிக்கை! தாங்க்ஸ் சார்! வேறேதும் தகவல் வந்தால் நிச்சியமாக தகவல் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பினோம்!
தகவல் சொன்ன மாத்திரத்தில் உத்தரவு போட்ட தலைமைச் செயலாளர், உடனடியாக டீமை அனுப்பி நடவடிக்கை எடுத்த கலெக்டர் அண்டு டீம்… அனைவருக்கும் எங்களது கோத்தாரி டிஜிட்டல் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
– பாலகிஷன்









