பொது

பொள்ளாச்சி கொடூரம்: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி

தமிழகமே எதிர்பார்த்திருந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரும் குற்றவாளிகளுக்கு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி ஆயுள் தாண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

2019-ல் நடத்த கொடூரம்:

2019 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கியது ஒரு கொடூரமான சம்பவம். பிப்ரவரி 24-ஆம் தேதி, கோவையை அடுத்துள்ள பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், இளம் பெண் புகார் ஒன்று அளித்தார். அது வெறும் புகாராக இல்லாமல், அந்த பகுதியில் நடந்து கொண்டிருந்த ஒரு கொடூரத்தின் காகிதமாக தெரிந்தது. இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பேரும் அதிர்ச்சியை எற்படுத்தியது. 2016 முதல் 2018 வரையில், பல இளம்பெண்கள் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வீடியோ ஏடுக்கப்பட்டன. பின்னர், அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி, மீண்டும் மீண்டும் அவர்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். பெண்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, அவர்களை அடிமைகளாக மாற்றியது அந்த கொடூர கும்பல். வாழ்நாள் முழுவதும் அழியாத குற்றவுணர்வுடன் வாழ வேண்டிய பரிதாப நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இந்த வழக்கில் சம்மத்தப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹேரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரும் பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மிரட்டல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை பொள்ளாச்சி காவல்துறையே விசாரித்தது. ஆனால், விசாரணையில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் பிறகு இந்த வழக்கு, முதலில் தமிழ்நாடு குற்றப்புலனாய்வு (CB-CID) பிரிவுக்கும், பின்னர் 2019 ஏப்ரல் 25-ம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவான CBI-க்கும் மாற்றப்பட்டது.

முறையான விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்தக் கும்பல், பாதிக்கப்பட்டவர்கள் இணங்க மறுத்தால், தங்களுடைய வீடியோக்களை குடும்பத்தினருக்கும் சமூகத்துக்கும் கசியவிடுவதாக மிரட்டியதாக பல இளம்பெண்கள் தங்கள் வாக்குமூலங்களில் தெரிவித்தனர். அதன்பேரில் கடந்த 2023 பிப்ரவரி 24-ம் தேதி நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் பாதிக்கப்பட்ட 20 பெண்களும் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் இந்த வழக்கில் 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோகள் இருத்த திருநாவுக்கரசின் ஐஃபோன் மற்றும் சபரிராஜன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப்டாபும் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்து.

கைதான 9 பேரும் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி நந்தினிதேவி விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13 ஆம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் அறிவித்தது. மேலும், தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தில் 12 ஆம் தேதி மாலை முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விசாரணையில் ஆஜராகும் சாட்சிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தவிர, வேறு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை முழுவதும் வீடியோ கான்பரன்ஸ் முறையில், மூடப்பட்ட தனி அறையில் நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கூட்டு பாலியல் வன்முறை குற்றச்சாட்டு மற்றும் மீண்டும், மீண்டும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளும், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் முன்வைத்த குற்றச்சாட்டுகளும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறவில்லை. இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே.13) 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு விவரம்:

A1 சபரிராஜன் – 4 ஆயுள் தண்டனை, ரூ.40,000 அபராதம், A2 திருநாவுக்கரசு – 5 ஆயுள் தண்டனை ரூ.30,500 அபராதம், A3 சதீஷ் – 3 ஆயுள் தண்டனை, ரூ.18,500 அபராதம், A5 வசந்தகுமார் – 2 ஆயுள் தண்டனை, ரூ.13,500 அபராதம், A5 மணிவண்ணன் – 5 ஆயுள் தண்டனை, ரூ.18,000 அபராதம், A6 பாபு – ஒரு ஆயுள் தண்டனை, ரூ .10,500 அபராதம், A7 ஹேரேன்பால் – 3 ஆயுள் தண்டனை, ரூ.14,000 அபராதம், A8 அருளானந்தம் – ஒரு ஆயுள் தண்டனை, ரூ. 5,500 அபராதம், A9 அருண்குமார் – ஒரு ஆயுள் தண்டனை, ரூ.5,500 அபராதம், இந்த அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரித்து கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு 85 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ. 10 முதல் 15 லட்சம் வரை கிடைக்கும் வகையில் பிரித்து கொடுக்கப்படும் என அந்த நிதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பு, ஆறு ஆண்டுகளாக நீதி வேண்டி காத்திருந்த பெண்களுக்கு கிடைத்த அறுதலாகும். ஒவ்வொரு குற்றவாளிக்கும் தக்க தண்டனை வழங்கப்பட்டாலும்,பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொண்ட மன வேதனையை சமாளிக்க இது போதாது.

பொள்ளாச்சியில் நிகழ்ந்த இந்த கொடூரம், தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியது மட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பும், உரிமையும் மீண்டும் ஒரு முறை கேள்விக்குள்ளான அதிர்ச்சி சம்பவமாகவே இருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு, அவர்களின் வேதனையை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பது நிதர்சன உண்மையே.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts