தமிழகத்தின் முன்னாள் டிஜிபி டாக்டர் கே. ஜெயந்த் முரளி, 2022 ஜனவரி முதல் 2025 மார்ச் வரை 21 முழு (42 KM) மற்றும் 138 (21.5 KM) அரை மாரத்தான்கள் என மொத்தம் 159 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, India Book of Records 2026-இல் இடம் பிடித்துள்ளார்.
1991 முதல் 2022 வரை தமிழ்நாடு காவல் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 31 ஆண்டுகள் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றிய ஜெயந்த் முரளி, தனது நுணுக்கமான அணுகுமுறையால் பல முக்கிய பதவிகளில் சிறப்பாக பணியாற்றினார். 2008-ஆம் ஆண்டு ஜனாதிபதி பதக்கம், 2017-ஆம் ஆண்டு பொது சேவைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கம், 2019-ம் ஆண்டு அத்தி வரதர் சிறப்பு சேவை பதக்கம் என இவரது பதக்க பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அவர், லஞ்ச ஒழிப்பு துறையின் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தபோது, அப்பாவி மக்களிடம் லஞ்சம் வாங்கிய முக்கிய அதிகாரிகளை பொறிவைத்து பிடித்து உள்ளே தள்ளினார்.
காஞ்சிபுரத்தில் ஒரு அரிய நிகழ்வு நடக்கும். அங்கே உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள குளத்தில் பள்ளி கொண்டிருக்கும் அத்தி வரதரை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக வைப்பார்கள். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்த நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜெயந்த் முரளி தலைமையில் போலீசார் சிறப்பாக பாதுகாப்பு பணியை செய்தனர். இதனால் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றார்.
பின்னர், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பிரபலமான சிலைகளை மீட்டு தமிழகத்திற்குத் திருப்பி கொண்டு வந்தார். உலக அளவில் எதிர்காலத்தில் விஸ்வரூபமாக உருவெடுக்கக் காத்திருக்கும் புது வகையான ‘க்ரைம்’கள் எவை எவை என்பதை தீர ஆராய்ந்து அவற்றை வரும் முன் தடுப்போம் முறையில் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுவதில் தனி முத்திரை பதித்தவர்.

காவல் துறையில் பணியாற்றிய காலத்தில் குற்றத்தை தடுக்க எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே அளவு சமுக அக்கறையுடன் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களுக்கு வழங்கி வந்தார். அதன் ஒரு கட்டமாக மாரத்தான் ஓட்டத்தை ஒரு களமாக பயன்படுத்தினார். அவர் ஏராளமான மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இளைஞர்களுக்கு Inspiration-ஆக இருந்துள்ளார். 2018 மற்றும் 2019-இல் மோகன் அறக்கட்டளையுடன் இணைந்து உறுப்பு தானத்திற்கான விழிப்புணர்வு மாரத்தான்களில் பங்கேற்று, Asia Book of Records மற்றும் India Book of Records-இல் ஏற்கனவே இடம்பிடித்தவர். 2022-ல் ஓய்வு பெற்ற பின்பும் அவரது கால்கள் நிற்கவில்லை – தொடர்ந்து மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
ஜெயந்த் முரளிக்கு இன்னொரு முகமும் உண்டு – அவர் ஒரு நல்ல எழுத்தாளராகவும் விளங்கினார். இதுவரை அவர் எழுதிய 8 நூல்களில், Enkindling the Endorphins of Endurance (ஆங்கிலம்) மற்றும் Marathon (தமிழ்) என்ற நூல் மாரத்தான் ஓட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியவை. அவர் சமீபத்தில் எழுதிய நூல்கள் Quantum Creation மற்றும் Chasing the Lost Gods, ஆன்மீகம் மற்றும் இந்தியாவின் பண்பாட்டு மரபுகளை வெளியுலகிற்கு பறைசாற்றும் விதத்தில் எழுதி இருக்கிறார். மேலும் காவல்துறை புலன் விசாரணை குறித்த 42 Mondays, Future policing உள்ளிட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகங்கள் சமுகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
காவல் துறையில் தனது பெயரை தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பதிய வைத்த ஜெயந்த் முரளி, பணி ஓய்வுக்கு பிறகு பிரபல கோத்தாரி நிறுவனத்தின் ஆலோசகராகவும் தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
– Gowtham R









