12 நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரான் தனது அணு சக்தி நிலையங்களில் யுரேனியத்தை அணு ஆயுதம் தயாரிக்கும் அளவிற்கு செறிவூட்ட இருப்பதாகவும் இது இஸ்ரேலுக்கு ஆபத்தாக அமையும் எனவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அணுசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், முப்படை தளபதி, ஈரான் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான ஐயர்ன் டோமை முறியடித்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் சேதமடந்தன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கியது. இதில் 3 முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டு கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான் பரப்பை முழுவதுமாக மூடியுள்ளன.
இதையடுத்து ட்ருத் சமூக வலைதளத்தில் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அப்பதிவில், “ஈரான் இந்த போரை நிறுத்திய 12 மணி நேரத்தில், இஸ்ரேல் இந்த போரை நிறுத்தும். 24 மணி நேரத்தில், இந்த 12 நாள் போர் முடிவுக்கு வரும். அது உலகத்தால் வரவேற்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் போர்நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனினும் ஈரானும் போர் நிறுத்தம் பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.









