ட்ரோன் (Drone) மூலம் ரத்தம் விநியோகம் (blood delivery) செய்வது நேர விரயத்தை குறைத்து, பலரின் உயிரை காப்பாற்றமுடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பு, கண்காணிப்பு, விவசாயம், புவி ஆராய்ச்சி என பல துறைகளில் ட்ரோன் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மருத்துவத்துறையில் அதன் பயன்பாடு குறித்த ஆராய்ச்சியை ICMR நடத்தியுள்ளது. இந்த ஆய்வு குறித்த தகவல்களை ஸ்ப்ரிங்கர் நேச்சர் (Springer Nature) என்ற இதழில் ICMR வெளியிட்டுள்ளது.
அவசரகால மருந்துகள், ரத்தம் எடுத்து செல்லுதல் போன்ற முக்கிய வேலைகளுக்கு, வருங்காலத்தில் ட்ரோன் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென்று ICMR தெரிவித்துள்ளது. ஏற்கனவே சில நாடுகளில் மருத்துவத்துறையில் ட்ரோன் பயன்பாட்டில் இருக்கிறது. அதேபோல கூடிய விரைவில் இந்தியாவிலும் நிகழுமென ICMR தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மேகாலயாவின் மலை பகுதிகளில் இருக்கும் சில மருத்துவமனைகளுக்கு அவசரகால மருந்துகள் ட்ரோன் மூலம் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அதை விரிவுபடுத்தி, போக்குவரத்து வசதி சரியாக இல்லாத பகுதிகளுக்கு அவசரகால மருந்துகள் மற்றும் ரத்தம் விநியோகம் செய்வது ஆய்வு செய்துவருவதாக ICMR தெரிவித்துள்ளது.
சரியான வெப்பநிலை, காற்றழுத்தம் போன்றவற்றை கணக்கிட்டு ஒரு ட்ரோன் மூலம் ரத்தம் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த ஆய்வின் போது 36 கிலோமீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ட்ரோன் கடந்திருந்தது. சாலை மூலம் ரத்தம் எடுத்துச்செல்வதை ஒப்பிடும்போது, ட்ரோன் பயன்பாட்டால், 50 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை மிச்சமாகிறது என்று ICMR தெரிவித்துள்ளது.
அவசரகாலத்தில் ரத்தம் தேவைப்படும்போது, இந்த ட்ரோன் பயன்பாடு கைகொடுக்கும் என்று ICMR நம்பிக்கை தெரிவித்துள்ளது. ட்ரோன் மூலம் துரிதமாக ரத்தம் எடுத்துச்செல்ல முடியும் என்றாலும், அதை இயக்குவதற்கான தொழில்நுட்பம், வேக வரம்பு, உயர வரம்பு போன்ற தடைகள் இருப்பதாகவும், அவற்றையெல்லாம் சரிசெய்தால் ட்ரோன் பயன்பாட்டால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று ICMR தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது.







