சென்னை ஐ.டி. நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்த கவின் கணேஷுக்கு, பாளையங்கோட்டையில் சித்த மருத்துவராகப் பணிபுரிந்த சுபாஷினி மீது காதல் ஏற்பட்டது. இருவரும் மனம்விட்டுப் பழகி காதலித்தனர். ஆனால், கவின் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இதுவே அந்தக் காதலுக்கு எதிரான காரணமாக இருந்தது. குறிப்பாக, சுபாஷினியின் பெற்றோர்கள் இருவரும் போலீஸில் சப்-இன்ஸ்பெக்டர்களாக இருந்ததால், இந்தக் காதலைக் கடுமையாக எதிர்த்தனர்.
காதலியின் தம்பி சூர்ஜித், இதனால் கவின் மீது கோபத்தையும், வெறுப்பையும் வளர்த்துக்கொண்டார். கடந்த ஜூலை 27, சனிக்கிழமை அன்று, வார விடுமுறைக்காகப் பாளையங்கோட்டைக்கு வந்திருந்த கவின், தன் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அப்போது இதைத் தெரிந்துகொண்ட சூர்ஜித், மருத்துவமனை அருகே கவினை வழிமறித்து, “என் பெற்றோர்கள் உங்களுடன் பேச வேண்டும்” என்று பொய் சொல்லி பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகருக்கு அழைத்துச் சென்றான். அங்கே, சூர்ஜித் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கவினை சரமாரியாக வெட்டினான்.
கவின் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தான். சூர்ஜித் கவினை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினான். இந்தச் செய்தி அறிந்த பாளையங்கோட்டை போலீஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, கவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய சூர்ஜிதை போலீஸார் உடனடியாகக் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
கவினின் பெற்றோருக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தங்கள் மகன் இப்படி கொடூரமாகக் கொல்லப்பட்டதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த நான்கு நாட்களாக, கவின் உடலை வாங்க மறுத்து போராடி வந்தனர். மகனின் கொலையில், சுபாஷினியின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக அவர்கள் புகார் கொடுத்தனர். அவர்களையும் சிறையில் அடைக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து சூர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ சரவணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், தாய் கிருஷ்ணகுமாரியையும் சிறையில் அடைக்கும் வரை மகனின் உடலை வாங்க மாட்டேன் என்று கவினின் தந்தை சந்திரசேகர் உறுதியாக இருந்தார்.
கொலை நடப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு, பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தன் மகனை மிரட்டியதாகவும், கவின் பெற்றோர் வேதனையுடன் கூறினர். கவினின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச் சென்ற தி.மு.க. எம்.பி. கனிமொழி கருணாநிதி மற்றும் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் உடலைப்பெற்றுக்கொள்ளுமாறு கேட்டனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையில் (FIR)-யில் பெயர் இருந்தும், ஏன் கைது சிறையில் அடைக்கவில்லை என உறவினர்கள் கேள்வி எழுப்பி, உடலை வாங்க மறுத்தனர். இதற்கிடையில், இந்த வழக்கின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட தமிழ்நாடு காவல்துறை, சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி உத்தரவிட்டது.
சூர்ஜித்தின் பெற்றோர் போலீஸில் இருப்பதால், இந்த வழக்கு நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. சூர்ஜித்தின் பெற்றோர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டு, சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தாய் கிருஷ்ணகுமாரியை இன்னும் கைது செய்யவில்லை.
‘எவிடென்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ஏ. கதிர், இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் எனப் போராடி வந்தார். சூர்ஜித்தின் பெற்றோரை உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என்றும், கவினுக்கும் சுபாஷினிக்கும் இடையே இருந்த காதலை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் பதிவுகள் கவின் குடும்பத்திடம் இருப்பதாகவும் அவர் கூறினார். “இது சூர்ஜித்தால் மட்டும் நடந்த கொலை இல்லை. கவின் உடலில் இருந்த காயங்கள், பயிற்சி பெற்றவர்களால் தாக்கப்பட்டதை காட்டுகிறது. பிரேதப் பரிசோதனையும் அவசரமாகச் செய்யப்பட்டது. அதனால், வெளிப்படையாக இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான கொலைகளைத் தடுக்க ஒரு தனியான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜுலை 30, அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர், தென் மண்டல ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்ஹா மற்றும் திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமானி ஆகியோருடன் கவினின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டிருப்பதால், உடலைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், சூர்ஜித்தின் பெற்றோர் FIR-ல் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவர்களை சிறையில் அடைக்கும்வரை உடலை வாங்க மாட்டோம் என்று கவின் பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர்.
சுபாஷினி இதுவரை நடந்ததை எல்லாம் அமைதியாக எதிர்கொண்ட நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்; என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இந்தக் கொலையில் எந்த சம்மந்தமும் இல்லை; எதுவும் தெரியாமல் தேவையில்லாமல் யாரும் பேச வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்கள் தொடர் போராட்டம் மற்றும் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி, கவின் செல்வகணேஷின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கவினின் உடல் அவரது தந்தை சந்திரசேகரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியர் சுகுமார் மற்றும் பிற அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி, இறுதிச் சடங்குகளுக்காக கவினின் சொந்த ஊருக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
கவின் கணேஷின் இந்தச் சோகமான கதை, சாதிப் பாகுபாடுகள் இன்னும் நமது சமூகத்தில் எப்படி ஆழமான காயங்களை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகிறது. கவின் குடும்பம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.









