கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத 345 அரசியல் கட்சிகளை, இந்தியாவின் அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் இருப்பதாகவும், அவற்றில் பல கட்சிகள் அங்கீகாரம் பெருவதற்கான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், இதுபோன்ற அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவில் இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இந்த கட்சிகள் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்றும், இந்த கட்சிகளுக்கு அலுவலகங்கள்கூட இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின் கீழ், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர், இந்த 345 அரசியல் கட்சிகளையும் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்த கட்சிகளிடம், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.









