மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு, வழக்கம்போல் மத்திய மாநில மருத்துவ மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி கொள்ள ஆரம்பித்தனர். இதன் கிளைமாக்ஸாக… சென்னையில் ஆக்.12 ஆம் தேதி அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் திடீரென ரெய்டில் இறங்கினர்.
“மா… எனக்கு இருமல் வருகிறது…” என அந்த குழந்தை கேட்க… கோல்ட்ரிப் இருமல் மருந்தை கொடுத்த பிறகு அங்கேயே மயங்கி விழுந்தன. விழுந்த சில மணி நேரத்திலேயே குழந்தைகளின் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்தன. இதுதான் இந்த சம்பவத்தின் தொடக்கம்!
மத்திய பிரதேச போலீசாரின் விசாரணையில் தான் தெரிய வந்தது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள். இந்த விசாரணையில் அதிரடியாகக் களம் இறங்கியது மத்திய பிரதேச போலீசார் குழு. அவர்கள் முதலில் கால் வைத்தது தமிழகத்தில்தான். காஞ்சிபுரத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம்தான் இந்த மருந்தை தயாரித்த நிறுவனம். அந்த குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில், 48.6% டை எத்திலீன் கிளைக்கால் எனும் கெமிக்கல் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த கெமிக்கல்தான், குழந்தைகள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, சிறுநீரகங்களை முற்றிலும் செயலிழக்கச் செய்தது.
இந்த வழக்கில் தமிழக போலீசார் பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய பிரதேச போலீசார் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து அந்த மருந்து கம்பனியின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். இந்த விசாரணை நாளுக்குநாள் வலுவடைந்த நேரத்தில், இந்த சம்வத்துடன் தொடர்புடைய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வந்தது.
இதற்கிடையில் மத்திய பிரதேச சுகாதாரத் துறை இணை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல், “ஒரு மருந்திற்கு உரிமம் வழங்குவதும், அதன் தரத்தை ஆய்வு செய்வதும் அந்த மாநிலத்தின் கடமை. அந்த வகையில் தமிழக அரசு கவன குறைவாக இருந்துள்ளது.” என குற்றம் சாட்டினார்.
அதற்கு பதிலளித்த தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள்” என்று நரேந்திர சிவாஜி படேல் அறிக்கைக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த குழந்தைகள் இறப்புக்கு யார் காரணம் என்கின்ற விஷயத்தில் குழாயடி சண்டையாகவே மாறிவிட்ட நிலையில், டெல்லி பிரதமர் அலுவலகத்திலிருந்து ரகசிய உத்தரவு பிறப்பிக்கபட்டதாக சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து, எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி அக்டோபர் 12ஆம் தேதி ED அதிகாரிகள் சென்னையில் ரெய்டில் குதித்தனர்.
‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்துடன் தமிழக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறியிருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகம்.
ஸ்ரீசன் பார்மா நிறுவன உரிமையாளர் வீட்டில் ED அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றனர். மருந்து ஏற்றுமதிக்காக Fake No Objection Certificate பெற லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாம். சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் 7 இடங்களில் ED நடத்திய ரெய்ட்களில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாம்.
இந்தச் சம்பவம், நாட்டின் மருந்து உற்பத்தி நிறுவனங்களை கண்காணிக்கும் முறை மீதும், சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் மீதும் பொதுமக்களுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த பிறகு, ஆலையை மூடுவது, உரிமத்தை ரத்து செய்வது, அதிகாரிகளை இடைநீக்கம் செய்வது – இவை எதுவும் அந்த உயிர்களை மீட்டுக் கொண்டு வர முடியாது. நாடு முழுவதும் மருந்து தயாரிப்பு கட்டுப்பாட்டு அமைப்புகளை மத்திய அரசும் மாநில அரசும் ஒரே அணியில் நின்று இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.









