அரிசி என்பது தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், அதிகமாக வெள்ளை அரிசி சாதம் சாப்பிடுவது உடலில் பல சிக்கல்களை உருவாக்கும்.குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளிட்ட வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதற்கான தீர்வாக, திருவனந்தபுரத்தில் உள்ள CSIR-National Institute for Interdisciplinary Science and Technology (CSIR-NIIST) விஞ்ஞானிகள் “டிசைனர் அரிசி” எனப்படும் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான அரிசி வடிவத்தை உருவாக்கியுள்ளனர்.
அதிக புரோட்டீன், இரும்புச் சத்து, போலிக்அமிலம், வைட்டமின் பி12 உள்ளிட்ட ஊட்டச் சத்துகள் அடங்கிய ‘டிசைனர் அரிசி’ ரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில், சாதாரண அரிசியைவிட 3 மடங்கு அதிக புரதச் சத்து உள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க முடியும். மேலும் டிசைனர் அரிசியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) அளவு மிக குறைவாக 54 ஆக உள்ளது.
கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதனால், ரத்தின் குளுக்கோஸ் அளவை இது சாதாரண அரிசிகளை போல உடனடியாக அதிகரிக்காது (sugar spike). சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (60-90) அதிகம் என்பதால், அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை உடனடியாக அதிகரித்து பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. புதிய டிசைனர் அரிசியில் ஜிஐ அளவு குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது வரப்பிரசாதமாக அமையும்.
இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள என்ரிச்ட் (Enriched) அரிசியில் இரும்பு, வைட்டமின் போன்ற சத்துக்கள் வெளிப்புறமாக சேர்க்கப்படுகின்றன. ஆனால், டிசைனர் அரிசியில் அரிசியின் உட்கட்டமைப்பே மாற்றப்படுகிறது. சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்க, உடல் எடையை கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களை தடுக்க, உதவும் “Functional Food” ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரிசியை மக்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.









