பொது

MICRO STRESS.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு மன அழுத்தங்கள் காலப்போக்கில் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நெருங்கிய உறவு மரணித்தல், காதல் தோல்வி அல்லது மணமுறிவு, விபத்து, வியாபாரத்தில் நஷ்டம் என பெரும் அசம்பாவிதங்கள் நடந்தால், நம்முடைய மனம் மிகுந்த அழுத்தத்திற்கு உட்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதுபோன்ற சம்பவங்களால் ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டால், அது நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதனால் அந்த மன அழுத்தத்தைச் சரிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துவிடுவோம். ஆனால், தினசரி நிகழும் சிறு சிறு மன அழுத்தங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நுண் மனஅழுத்தம் என்றால் என்ன?

தினமும் காலை அலாரம் அடிக்கும்போது, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுவது; தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு எரிச்சலடைவது; நிதானமாக காலை உணவை உண்ணமுடியாதது என சிறுசிறு சம்பவங்களால் பலருக்கு சிறிய அளவிலான நுண் மன அழுத்தம் ஏற்படுகின்றது. இந்த நுண் மன அழுத்தம், எப்போதோ ஒருநாள் ஏற்பட்டால் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் இவை தொடர்ச்சியாக ஏற்படும் போது பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பல வகையில் இந்த நுண் மன அழுத்தம் ஏற்பட்டாலும், 1) செயலாற்றலை முழுவதுமாக தீர்த்துவிடும் நுண் மனஅழுத்தம், 2)உணர்வு ரீதியாக களைப்படைய செய்யும் வகை, 3)அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கும் மனஅழுத்தம் என மருத்துவர்கள் மூன்றாகப் பிரித்துள்ளனர். உதாரணமாக, உங்களுடைய திறனுக்கு மீறிய பணிச்சுமை இருந்தால் அது உங்களுடைய செயலாற்றலை தீர்க்கும் நுண் மனஅழுத்தம். உங்களுக்கு பிடிக்காத நபருடன் தேவையின் பொருட்டு பழகினால் அது உங்களை உணர்வு ரீதியாக களைப்படையச்செய்யும் நுண் மனஅழுத்தம். உங்கள் துணையிடமோ குடும்ப நபர்களிடமோ, உங்கள் சுயத்தை இழந்து ஒரு வழக்கை முறையில் இருந்தால் உங்களுடைய அடையாளத்தை கேள்விக்குள்ளாக்கும் நுண் மனஅழுத்தம்.

இந்த சம்பவங்கள் எல்லாம் தினந்தோறும் பலர் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கிறது. அவற்றைச் சகித்துக்கொண்டே பலரின் காலமும் நகர்கிறது. ஆனால் இவற்றிற்கெல்லாம் சரியான கவனம் கொடுக்காவிட்டால் அது பெரியப் பெரிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

நுண் மனஅழுத்தத்தால் ஏற்படும் சிக்கல்…

தினசரி ஏற்படும் நுண் மன அழுத்தங்களால், மைகிரைன் தலைவலி, செரிமான கோளாறு, தூக்கமின்மை, உடற்சோர்வு, உளவியல் சிக்கல் போன்றவை ஏற்படுகிறது என்றும், இவற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஓய்வே இல்லாமல் வேலை செய்வதில் குறியாக இருக்கும் பலர், இந்த சிறு சிறு மன அழுத்தங்களையும் அதன் அறிகுறிகளையும் லேசாக எடுத்துகொள்கிறார்கள். ஆனால், சில நாட்களுக்கு பின்னர் ரத்த அழுத்தம், அல்சர், நீரிழிவு நோய், உடல்பருமன் என பல பெரிய சிக்கல்களில் சிக்கிக்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் கூறும் தீர்வு..

இந்த நுண் மனஅழுத்தங்களில் பல காரணிகள் புறச்சூழல் சார்ந்தது. அவற்றை தவிர்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், இந்த மன அழுத்தங்களை கொஞ்சம் சிறந்த முறையில் கையாள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அன்றாட வேலை, அலுவலக பணி, நண்பர்கள் உறவினர்களுடன் நேரம் செலவிடுதல் என தினசரி நாம் செய்யும் செயல்களில் எதற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் தெளிவிருந்தால் இந்த நுண் மன அழுத்தங்களை எளிதாக கையாளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். யோகா, தியானம், உடற்பயிற்சி, நல்ல உணவுப் பழக்கங்கள் என உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் செயல்களில் ஈடுபடவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Related Posts