“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்ற புரட்சி கவி பாரதியின் வார்த்தைகள் பாடகி சின்மயிக்கு சரியாக பொருந்திவிட்டது. சமீபத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில், சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மே 24-ம் தேதி நடந்தது. படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த படத்தில் வரும் ‘முத்த மழை’ என்ற பாடலை பாடகி தீ மிகவும் அற்புதமாக பாடியுள்ளார். ஆனாலும், சில காரணங்களால் பாடகி தீயால் இசை வெளியீட்டு விழாவிற்கு வர இயலவில்லை. அதனால், ‘தீ’ பாடிய அந்த ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடினார். அவருடைய குரலில் ‘முத்த மழை’ ஒரு பெரும் இசை மழையாக இருக்கவே, ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், முத்த மழையாக இருந்தது. சின்மயி ரசிகர்கள் மட்டுமல்ல அனைத்து இசைப் பிரியர்களும் அவரது குரலுக்கு அடிமையாகிவிட்டதாக சிலாகித்து பதிவிட்டிருந்தனர். சின்மயி குரலில் வெளியான ‘முத்த மழை’ பாடலை திரைப்படத்தில் சேர்க்குமாறு பல குரல்கள் எழுந்தன. ஆனால், 2018 அக்டோபரில் இருந்து, திரைப்படங்களில் பாடுவதற்கு சின்மயிக்கு தடை இருக்கும் நிலையில், இந்த பாடலை திரைப்படத்தில் சேர்க்க முடியாத நிலை இருந்தது. ஆனால், ரசிகர்களிடம் இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதால், சின்மயி பாடிய முத்தமழை பாடல், ‘தக் லைஃப்’ ஆல்பத்தில் 10வது பாடலாக முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில், “இந்த பாடல் இவ்வளவு பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கவே இல்லை. இது எனக்கு ஒருவித அச்சத்தை தருகிறது. உண்மையை பேசியதற்காக என்மேல் தடை இருக்கிறது. நான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை. எனக்கு துணையாக இருக்கும் என் குடும்பத்தினருக்கும் என் ரசிகர்களுக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். எத்தனை தடைகள் இருந்தாலும், உண்மையான திறமை இருக்கும் போது, அது தானாக வெளிவரும் என்பதும், அந்த திறமையை இந்த சமூகம் அங்கீகரிக்க ஒருபோதும் தவறுவதே இல்லை என்பதும் சின்மயி விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.









