மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் ‘பிரம்மயுகம்’ திரைப்படம் பெற்றது. இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.
உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக ‘Where the Forest Meets the Sea’ என்ற தலைப்பில் சிறப்புத் திரையிடல் ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு,’பிரம்மயுகம்’ திரையிடப்படவுள்ளது.
ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படம் இது. இந்த பிரிவில் திரையிடப்பட தேர்வான முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.
பிரம்மயுகம் படத்துடன் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களான ”Midsommar’ (2019), ‘Häxan’ (1922), ‘La Llorona’ (2019), ‘The Witch’ (2015), ‘Viy’ (1967), ‘You Won’t Be Alone’ (2022), ‘Under the Shadow’ (2016), ‘The Wicker Man’ (1973), ‘His House’ (2020), மற்றும் ‘Onibaba’ (1965) ஆகிய படங்களும் திரையிடப்படும்.
இது குறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம். மொழி மற்றும் நிலங்களைக் கடந்து இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, ’Emotion in Colour: A Kaleidoscope of Indian Cinema’ என்ற தலைப்பின் கீழ், மணிரத்தினம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ திரைப்படம் திரையிடப்பட்டது. வேறு எந்த தமிழ் படமும் இதுவரை ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.









