பொது

ஜோல்னா பை ஸ்டைலில் உருவான ஆப்பிளின் ‘iPhone Pocket’அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் ஜப்பானிய பேஷன் ஹவுஸான இசே மியாகியுடன் இணைந்து, ‘ஐபோன் பாக்கெட்’ என்ற புதிய ஆக்சஸரீயை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் மற்றும் ஐபாட் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளை எடுத்துச் செல்ல உதவும் இந்தச் சிறிய பை, இந்தியப் பாரம்பரிய ஜோல்னா பையின் மினி வெர்ஷன் போலத் தோற்றமளிக்கிறது.

இது ‘A piece of a cloth’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இது நவீன 3D பின்னல் தொழில்நுட்பத்தையும், இசே மியாகியின் புகழ்பெற்ற ப்ளீட்ஸ் பாரம்பரியக் கைவினை கலையையும் இணைக்கிறது.

சிறிய பை போலத் தோன்றும் இது, எந்தவொரு ஐபோன் மாடலையும் மற்ற சிறிய பொருட்களையும் எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. இதன் பின்னப்பட்ட அமைப்பு நீண்டு கொடுக்கும் தன்மை கொண்டது.

இதை கைகளிலும் மற்றும் தோள்களிலும் அணிந்து கொள்ளும் வகையில் இரண்டு விதமான பட்டைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ (AI) தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நிலையில், ஆப்பிள் இதுபோன்ற ஒரு பாரம்பரியப் பையைக் கண்டுபிடித்திருக்கிறதா?” எனப் பலரும் விமர்சித்துள்ளனர்.

எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், பிராண்டின் மதிப்பின் காரணமாக ஆப்பிள் ரசிகர்கள் இதையும் போட்டி போட்டு வாங்குவார்கள் என்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகூடிய விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Related Posts