இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை மத்திய அரசு தடை செய்த நிலையில், 2023ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் மைதனத்தில் அணியும் ஜெர்சியின் ஸ்பான்ஸராக இருந்த Dream11 உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பிசிசிஐ தெரிவித்தது. இதனால் பிசிசிஐக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்.09 ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடி வருகிறது. தற்போது, இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்ஸராக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்பான்சரை தேர்வு செய்ய பிசிசிஐ கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஏலம் இன்று (செப்டம்பர் 16) நடைபெற்றது. இதில் கேமிங், பந்தயம், கிரிப்டோகரன்சி மற்றும் புகையிலை தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்க தகுதியற்றவை என ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது. பிர்லா ஆப்டஸ் பெயிண்ட்ஸ் மற்றும் ஜே.கே. டயர் போன்ற முன்னணி நிறுவனங்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றன.
இந்த ஏலத்தில் அப்போலோ டயர்ஸ் 2027 வரை ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு ₹4.5 கோடி என, மொத்தம் 130 போட்டிகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்கு முன்பு Dream11 ஒரு போட்டிக்கு ₹4 கோடி செலுத்தியது.









