‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான “Agent Tina”-வுக்கு, தனி வெப் சீரிஸை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம், கைதி, விக்ரம், லியோ, மாஸ்டர் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அவரது திரைக்கதைகளில் நடிக்க, முன்னணி தமிழ் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கமல்ஹாசன், விஜய், சூர்யா, ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகியோர்களுடன் இணைந்து, லோகேஷ் பல ஹிட் படங்களை வழங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் “சினிமா யூனிவர்ஸ்” என்ற கான்சப்ட் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. முன்பு தமிழ் படங்களில் கேமியோ காட்சிகள் இருந்தாலும், ஹாலிவுட் திரைபடங்கள் பாணியில் தமிழ் சினிமாவின் பிரபலமானது ‘விக்ரம்’ திரைப்படத்திலிருந்து தான்.
இதனால், தமிழ் சினிமாவில் லோகேஷ் உருவாக்கிய “LCU” (Lokesh Cinematic Universe) மீது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம், ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘விக்ரம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் வீட்டுக்குள் நடைபெறும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில், ஒரு வயதான பெண் பறந்து சண்டை போடும் காட்சியில், ஒட்டுமொத்த தியேட்டரும் துள்ளி குதித்து கொண்டாடியது. அந்த கதாப்பாத்திரத்தின் பெயர் தான் “Agent Tina”.
அந்த கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டு, தனி வெப் சீரிஸை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த வெப் சீரிஸை லோகேஷ் நேரடியாக இயக்கவில்லை; அவரது உதவி இயக்குநர் தான் இயக்க உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









