“காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்ற பெருந் தத்துவத்தை அருளிய பட்டினத்தாரின் ஆலயம் திருவொற்றியூரில் இருக்கிறது. வங்காளவிரிகுடாவின் கரையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இவருக்குப் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகிறது. இவர் குடும்பத்தைப் பிரிந்து துறவியாக வந்தவர் என்பதால், இவரிடம் வேண்டிக்கொள்பவர்கள் நேர்த்திக்கடனாக இந்த பொருளை செலுத்துகிறேன் என்று வேண்டக்கூடாது என்ற முறை அங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. பட்டினத்தாரின் பிறந்த நட்சத்திரம் உத்திராடம் என்பதால் ஒவ்வொரு மாத உத்திராடத்தின் போதும், வியாழக்கிழமையிலும் சிறப்பு பூஜை நடக்கிறது.

பட்டினத்தார் வரலாறு
திருவெண்காடர் என்று அழைக்கப்பட்ட பட்டினத்தார் ஒரு சிவபக்தர். பெரும் வணிகராக இருந்த இவருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. புத்திர பாக்கியம் வேண்டி சிவனை வேண்டிவந்தார். இதற்கிடையே சிவசருமர், சுசீலை என்னும் மற்றொரு சிவபக்த தம்பதியினருக்கு சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு வளர்த்தனர். அந்த மருதவாணரை திருவெண்காடர் தத்தெடுத்து வளர்த்தார்.
மருதவாணர் ஒரு முறை கடல் கடந்து வாணிபம் செய்துவிட்டு ஊர் திரும்பி, தன் தாயாரிடம் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் கொண்டுசென்ற பெட்டியை பட்டினத்தார் திறந்து பார்த்தபோது, அதில் காதற்ற ஓர் ஊசியும், ஓர் ஓலைச்சீட்டும் இருந்தன. அந்த ஓலையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”என்று எழுதப்பட்டிருந்தது. “மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக்கூட கையில் கொண்டு செல்ல முடியாது,” என்பதையோ உணர்ந்து துறவறம் மேற்கொண்டார்.

பல ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் சிவத்தொண்டு செய்தார். திருவிடைமருதூர் தளத்தில் பட்டினத்தார் முக்தி வேண்டவே ஒரு கரும்பை கொடுத்து, அதன் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி கிடைக்கும் என சிவன் அருளினார். அதன்பின் பல தலங்களுக்குச் சென்ற பட்டினத்தாருக்கு, திருவொற்றியூரில் நுனி கரும்பு இனித்தது. அங்கிருந்த சிலரை அழைத்த அவர், தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி கூறினார். அவர்களும் அவ்வாறு செய்யவே, லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார். பிற்காலத்தில் அங்கு கோயில் எழுப்பப்பட்டது.

கோவிலின் மகிமை
இந்த கோவிலில், இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உட்கொண்டால் பிணி நீங்குவதாக நம்பப்படுகிறித்து. அதேபோல குபேரனே, பூலோகத்தில் சிவதரிசனம் செய்வதற்காக பட்டினத்தாராக பிறந்ததாக ஒரு நம்பிக்கை இருப்பதால், இங்கு வேண்டினால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வேண்டினால், நல்ல ஞானமுடைய குழந்தைகள் பிறக்கும் என்று அப்பகுதியில் சொல்லப்படுகிறது.









