சென்னையில் ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) தரப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. சந்திப்பில், அந்நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பிரிவின் துணைத் தலைவர் குணால் பெல் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், ஆல்-நியூ ஹோண்டா ZR-V (SUV) கார் மற்றும் சமீபத்தில் சந்தையில் அறிமுகமான நியூ ஹோண்டா சிட்டி (SEDAN) கார் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
“தமிழ்நாட்டை பொறுத்தவரை கிட்டத்தட்ட 72 சதவீதம் பேர் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதே நேரத்தில் அவர்களின் பார்வை மின்சார வாகனங்களை நோக்கியும் திரும்பியுள்ளது. பலர் இருசக்கர வாகனத்திலிருந்து கார்களை நோக்கி நகர்கிறார்கள். குறிப்பாக இளம் தலைமுறையினர். அவர்களுக்கு ஏற்ப இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.சிக்னேச்சர் பிளேடு ஐ எல்இடி விளக்குகள், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள், புதிய கிறிஸ்டல் பிளாக் வண்ணம் அவர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.SEDAN கார் வகைகளில், இந்தியாவிலேயே நீளமானதாக நியூ ஹோண்டா சிட்டி இருக்கிறது” என குணால் கூறினார்.
மேலும், ஹோண்டாவின் உற்பத்தி ஆலை தமிழ்நாட்டில் எப்போது துவங்கப்படுமென குணாலிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தற்போது ராஜஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலை இயங்கிவருகிறது. புதிய உற்பத்தி ஆலை குறித்து ஹோண்டா திட்டமிடவில்லை” என்றார்.
தொடர்ந்து, 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்து பேசிய அவர், 2009 ஆம் ஆண்டிலிருந்தே ஹோண்டாவின் வாகனங்கள் அவ்வகை பெட்ரோலுக்கு ஏற்றபடியே வடிவமைக்கப்பட்டு வருவதாகவும், ஹோண்டாவின் வாடிக்கையாளர்கள் யாரும் அதுகுறித்து அச்சமடைய வேண்டாமெனவும் தெளிவுபடுத்தினார்.
தற்போது பெட்ரோல்-மின்சாரமென ஹைபிரிட்(hybrid) வகை SUV மற்றும் SEDAN கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள ஹோண்டா, இந்தியாவின் முதல் பேட்டரி மின்சார வாகனம் (BEV) 2026-27ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்துமென அவர் தெரிவித்தார். ‘ஜீரோ கார்பன்’ நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஹோண்டா முக்கிய பங்காற்றும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றார். மேலும், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய எஸ்யூவி (SUV) ரக வாகனமான ஹோண்டா ZR-V, ஜப்பானிலிருந்து முழுமையாகத் தயாரிக்கப்பட்ட நிலையில் (CBU) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார்.
இந்தியாவிலேயே டெல்லி-NCRக்கு அடுத்தபடியாக ஹோண்டா கார்கள் அதிகம் விற்பனையாகும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதாக கூறிய குணால் பெல், சென்னை மட்டுமல்லாது கோவை, சேலம், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளிலும் ஹோண்டா கார்கள் அதிகம் விற்பனையாவதாக குறிப்பிட்டார்.
இந்தியாவில் உயர்தர கார்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ‘ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்’ (HCIL), டிசம்பர் 1995-இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவிலும், அதிநவீன உற்பத்தி ஆலை ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள தபுகாராவிலும் அமைந்துள்ளன.









