LPG சிலிண்டர்களை விநியோகிக்கும் முறையை வலுப்படுத்தும் நோக்கில், இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியாளரான TVS மோட்டார் நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IndianOil) ஒரு முக்கியக் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து TVS மோட்டார் நிறுவனம், நாடுமுழுவதும் உள்ள 13000 க்கும் மேற்பட்ட LPG விநியோகஸ்தர்கள், வீடுகளில் சிலிண்டர் விநியோகம் செய்வதற்கு TVS King Kargo HD வாகனங்கள் பயன்படுத்தும்படி செய்துள்ளது.
தூய்மையான, அதிகத் திறனுடைய மற்றும் செலவு குறைந்த LPG சிலிண்டர் விநியோகத்தை சாத்தியமாக்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் அதே வேளையில், இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து நோக்கிய மாற்றத்தையும் இது ஆதரிக்கிறது.
இந்த முயற்சி கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு, இந்தியன்ஆயில் விநியோகஸ்தர்களுக்கு மொத்த உரிமையாளர் செலவை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முன்னெடுப்பு, செயல்பாட்டுத் திறனையும் லாபத்தையும் மேம்படுத்துவதோடு, நிலைத்தன்மை (sustainability) மற்றும் இந்தியாவின் தூய்மையான போக்குவரத்து ஆகியவை குறித்து இருநிறுவனங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.
இது குறித்து TVS மோட்டார் நிறுவனத்தின் வணிக ரீதியான போக்குவரத்துப் பிரிவுத் தலைவர் ரஜத் குப்தா கூறுகையில், “TVS மோட்டார் நிறுவனத்தில், தினசரி வணிகத்தை மேலும் திறமையானதாகவும், நீடித்ததாகவும் மாற்றும் போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இந்த ஒப்பந்தம், நாடு முழுவதும் கடைசி மைல் LPG சிலிண்டர் விநியோகத்தை மாற்றுவதற்காக, இரண்டு நம்பகமான நிறுவனங்களின் பலத்தை ஒன்றிணைக்கிறது. விநியோகஸ்தர்களுக்கு நம்பகமான, உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களை நாங்கள் வழங்குகிறோம். இவை இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், தூய்மையான செயல்பாடுகளை ஆதரிக்கவும் உதவுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள தொழில்களுக்கு, நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தை நடைமுறைக்கு உகந்ததாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாற்றுவதற்கான மற்றொரு படியாக இந்த இந்தக் கூட்டு முயற்சி அமைகிறது.” என்றார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ED, SR & SH-TNSO, C அசோகன் கூறுகையில் , “நாட்டின் வளர்ச்சிக்கான ஆற்றல் தேவைகளை நிலைத்தன்மையுடன் வழங்குவதில் இந்தியன் ஆயில் நிறுவனம் முன்னோடியாக இருக்கிறது. LPG விநியோகத்தை நவீன படுத்தும் பணியில் இது முக்கிய படியாக இருக்கும். வாகனக் குழுவின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், எங்கள் விநியோகஸ்தர்களுக்கான இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் இந்த மின்சார சரக்கு வாகனங்களின் அறிமுகம் உதவும். மூலோபாயத் தொழில் கூட்டாண்மைகள் (strategic industry partnerships), பசுமையான மற்றும் மேலும் நிலையான தளவாடங்களை நோக்கி இந்திய மாறுவதை எப்படி விரைவுபடுத்த முடியும் என்பதை இந்த ஒப்பந்தம் நிரூபிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
நீண்டகால கூட்டாண்மையின் துவக்கத்தை குறிக்கும் இந்த ஒப்பந்தத்தை இருநிறுவனங்களின் மூத்த தலைவர்கள் கோயம்பத்தூரில் கையெழுத்திட்டனர். நாடு முழுவதும் சிறப்பான LPG விநியோகத்தை வழங்க முதல் கட்டமாக இந்தியன் ஆயில் விநியோகஸ்தர்களுக்கு இந்த கூட்டாண்மை மூலம் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
(இக்கட்டுரை இண்டஸ்ட்ரியல் எகனாமிஸ்ட்டில் வெளியான அசல் கட்டுரையின் தமிழாக்கம். தமிழாக்கம்: வீரச்செல்வி மதியழகன்.)









