பொது

வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கும் பிளாஸ்டிக்.. அதிர்ச்சியூட்டிய லான்செட் அறிக்கை!

இன்றைய காலகட்டத்தில் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய சவாலாக பிளாஸ்டிக் இருந்து வருகிறது. நீர்,நிலம்,காற்று என அனைத்திலும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம். சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் தட்டிலோ, பேப்பரிலோ வைத்து உட்கொள்ளும்போது அது உடலுக்கு தீங்கை ஏற்படுகிறது என்பது பலரும் தெரிந்த விஷயம்தான். ஆனால், கருப்பையில் இருக்கும் குழந்தையைக்கூட இந்த பிளாஸ்டிக் பாதிக்கின்றது என லான்செட் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

“த லான்செட்” (The Lancet) என்பது மிகவும் பழமையான புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இதழ்களில் ஒன்றாக இருக்கிறது. 1823லிருந்து வெளியாகி வரும் இந்த ஆய்வு இதழில், நோய்கள், தடுப்பூசி செயல்திறன், மருத்துவக் கொள்கைகள் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகிவருகிறது. உலகத்தின் சுகாதார பிரச்சனைகளில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை இந்த ஆய்வு இதழ் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜனவரிமாத இதில், “Global health burdens of plastics: a lifecycle assessment” என்ற ஆய்வு கட்டுரை வெளியாகியுள்ளது. அந்த ஆய்வு கட்டுரையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கு உலகளவில் ஆண்டுக்கு குறைந்தது 1.5 டிரில்லியன் டாலர் செலவாகிறது; வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மாசுபாடுகள் இரு மடங்கிற்கும் அதிகமான சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும; அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு மற்றும் நச்சுத்தன்மை வெளிப்பாடு ஆகியவை அதிகரிக்கும் என அந்த ஆய்வு எச்சரிக்கை விடுக்கிறது.

மேலும், தற்போது தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே மறு சுழற்சி செய்யப்படுகின்றன என்றும், இதனால் 8,000 மெகா டன்கள் பிளாஸ்டிக் கழிவுகள் பூமியை மாசுபடுத்துகின்றன என்றும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆகியவை ஆஸ்துமா, புற்றுநோய், மாரடைப்பு, நீரிழிவு, ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. கருப்பையில் உள்ள சிசு முதல் முதுமை வரை அனைத்து நிலைகளிலும் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பை ஏற்படுத்துகிறது என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கருவில் இருக்கும் சிசுவை பாதிக்கும் பிளாஸ்டிக்..

கர்ப்ப காலத்தில், தாயின் உடலில் ஏற்படும் எந்த மாற்றமும், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும். இந்த நிலையில், பிளாஸ்டிக்கில் உள்ள சில ரசாயனங்கள் (chemicals) தாயின் உடலுக்குள் நுழைந்து, குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

லான்செட் ஆய்வறிக்கையின்படி பிளாஸ்டிக் தயாரிப்புகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் BPA (Bisphenol A), Phthalates, PFAS போன்ற ரசாயனங்கள் நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கும் (Endocrine Disruptors) தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இதனால் ஹார்மோன் சிக்கல்கள் ஏற்படலாம்.

பிளாஸ்டிக்கில் இருக்கும் ரசாயனங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு (Miscarriage) அபாயம், முன்கூட்டிய பிரசவம் (Preterm Birth) ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல இந்த ரசாயனங்கள் தொப்புள்கொடி வழியாக குழந்தையின் ரத்த ஓட்டத்தில் கலந்தால், குறைந்த பிறப்பு எடை, குழந்தையின் மூளை மற்றும் ஹார்மோன் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

Related Posts