இந்தியாவில் ரூ.10,000 கோடி முதலீடு செய்ய சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சைப்ரஸ் நாட்டை சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் (Interorient Navigation Co Ltd) மற்றும் டென்மார்க்கை சேர்ந்த டென்ஷிப் & பார்ட்னர்ஸ் (Danship & Partners Ltd) நிறுவனங்கள் அன்னிய முதலீட்டுத் திட்டத்தின் (FDI) கீழ் இந்த முதலீட்டை செய்கின்றன.
1979ல் நிறுவப்பட்ட இன்டர் ஓரியண்ட் நிறுவனம், தற்போது உலகளவில் 100க்கும் மேற்பட்ட சரக்குக் கப்பல்களைக் கொண்ட குழுவை இயக்கி வருகிறது. மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இன்டர் ஓரியண்ட் நிறுவனம் இருந்து வருகிறது.
டென்மார்க் நாட்டை தள மாகக் கொண்ட டென்ஷிப் & பார்ட்னர்ஸ், உலகம் முழுவதும் கப்பல் துறையில் வாடிக்கையாளர் சேவைத் துறையில் வளர்ந்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் முதலீடு செய்வதால், இந்தியாவின் கடல் வணிகத்தில் பெரும் வளர்ச்சி ஏற்படுமென பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டில் முதல் அன்னிய முதலீட்டுத் திட்டக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், இதுவரை எந்த கப்பல் நிறுவனமும் செய்யாத அளவு, மிகப்பெரிய முதலீட்டை இந்த இரு நிறுவனங்களும் செய்யவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டின் கீழ் வாங்கப்படும் கப்பல்கள் அனைத்திலும் இந்தியக் கொடி பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியக் கப்பல் துறையின் திறன் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.









