பொது

‘உலகின் உயிர் வாழத் தகுதியான நகரங்கள்’ பட்டியல்…!

2025ம் ஆண்டிற்கான ‘உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்’ பட்டியலை எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

உலக அளவில் 173 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, நிலைத்தன்மை, உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, போக்குவரத்து, இருப்பிடம், மருத்துவம், உள்நாட்டுக் கிளர்ச்சி, பயங்கரவாதம் போன்றவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

முதல் 10 இடங்களில்…

அளவீடுகளின் அடிப்படையில் கோபன்ஹேகன் (டென்மார்க்), வியன்னா (ஆஸ்திரியா), சூரிச் (சுவிட்சர்லாந்து), மெல்போர்ன் (ஆஸ்திரேலியா), ஜெனீவா (சுவிட்சர்லாந்து), சிட்னி (ஆஸ்திரேலியா), ஒசாகா (ஜப்பான்), ஆக்லாந்து (நியூசிலாந்து), அடிலெய்டு (ஆஸ்திரேலியா), வான்கூவர் (கனடா) ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

சரிவை சந்தித்த நகரங்கள்…

கடந்த முறை முதலிடத்திலிருந்த வியன்னாவை பின்னுக்கு தள்ளி இம்முறை கோபன்ஹேகன் முதலிடம் பிடித்துள்ளது. 2024ல் வியன்னாவில் நடக்கவிருந்த பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் நிகழ்ச்சி வெடிகுண்டு அச்சுறுத்தல் வந்தது போன்ற நிகழ்வுகளால் வியன்னா பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை 141வது இடத்தில் இருக்கின்றன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நிலவிய போர் சூழல் காரணமாக இந்த இரு நகரங்களும் 141வது இடத்தில் இருக்கின்றன. லண்டன், மான்செஸ்டர், எடின்பர்க் போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் சரிவை சந்தித்துள்ளன.

கடைசி இடங்களில்…

2025ம் ஆண்டிற்கான உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியலில் கடைசி இடத்தில் சிரியாவின் டமாஸ்கஸ் இருக்கிறது. சிரியாவில் நடந்த உள்நாட்டு போர் காரணமாகவே உலகில் வாழத் தகுதியற்ற நகரமாக அது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. லிபியாவின் திரிபோலி நகரம் கடைசியிலிருந்து 2வது இடத்தையும், வங்கதேச தலைநகர் டாக்கா கடைசியிலிருந்து 3வது இடத்தையும், பாகிஸ்தானின் கராச்சி கடைசியிலிருந்து 4வது இடத்தையும் பிடித்துள்ளன.

Related Posts