பொது

5 கிரைம்கள்… துப்பறிந்தது எப்படி? தமிழக ரயில்வே போலீஸின் லேட்டஸ் அதிரடி!

செப்டம்பர் 25, 2025 அன்று, கோயம்புத்தூரில் ரயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டையை வைத்து ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் கொள்ளை முயற்சி நடந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து இரயில்வே காவல்துறையின் (GRP) சிறப்புப் பிரிவினர் விசாரணையில் இறங்கினர். அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து அதில் இருந்த மர்ம நபர்களை தேடினர். இந்த தேடுதல் வேட்டையில் ஒரு சிறுவன் சிக்கியது திருப்புமுனை. இவனைத்தவிர மற்ற 5 கொள்ளையர்களையும் போலீஸார் கைது செய்தனர்.

செப்டம்பர் 14, 2025 அன்று, இருகூர் அருகே ஆறு மாதக் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. இந்தச் சடலம் மீட்கப்பட்டபோது, ஏதோ நரபலி கொடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் GRP சிறப்புப் பிரிவினருக்கு சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து, விசாரணையைத் தீவிரமாக்கிய போலீஸார், சிசிடிவி காட்சிகள் மூலம் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டனர். சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மூன்று பெண்கள் உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அக்குழந்தை மும்பையிலிருந்து சட்டவிரோதமாகத் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டது தெரியவந்தது. மேலும், அக்குழந்தை உடல்நலக்குறைவால் இறந்தபின், சட்டச் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கும்பல் உடலை இங்கே எடுத்துவந்து வீசியதும் அம்பலமானது.

செப்டம்பர் 14, 2025 அன்று மாம்பலத்தில் ரயில் விபத்தில் காயமடைந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரமேஷ் என்பவரின் வழக்கு GRP விசாரணைக்கு வந்தது. விபத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, GRP சிறப்புப் பிரிவினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையைத் தீவிரமாக்கினர். இதில், ரமேஷ் உண்மையில் ரயில் விபத்தில் காயமடையவில்லை என்பதும், அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கு உடனடியாக கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டு, எழும்பூர் DGP தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தாக்குதல் நடத்திய குற்றவாளியான முகமது ரியாஸ் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 16, 2025 அன்று திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் மூன்று பயணிகளைத் தாக்கியதில், பந்திதுரை, ஆர்.பிரசாத் மற்றும் தங்கப்பன் ஆகியோர் காயமடைந்தனர். இதில் 72 வயதுடைய தங்கப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். GRP எஸ்.ஐ. இராமகிருஷ்ணன் தலைமையில் தாக்குதல் நடத்தியவரைப் பிடிக்க விசாரணையைத் தீவிரமாக்கியதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்பவர் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 21, 2025 அன்று, 21 வயதுடைய பொறியியல் மாணவர் மாரீஸ்வரன், பாலியல் ரீதியான துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து ரயில்முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது மாமாவுக்குத் தற்கொலைக்கு முன் 33 பக்க வாட்ஸ்அப் குறிப்பை (WhatsApp Note) அனுப்பியிருந்தார். ஆரம்பத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், பின்னர் தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்காக மாற்றப்பட்டது. விசாரணையைத் தீவிரமாக்கியதில், இளங்கோவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்த கிரைம் சம்பவங்களை விசாரித்து துரிதமாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு தமிழக ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் வெகுவாக பாராட்டினர்.

Related Posts