பொது

இந்தியரிடம் கடன் வாங்கிய பிரிட்டிஷ் அரசு.. 109 ஆண்டுகளுக்கு பின் கடனை திருப்பி கேட்கும் பேரன்!

முதலாம் உலகப்போர் காலத்தில் ஒரு இந்தியரிடம் வாங்கியக்கடனை திருப்பி செலுத்துமாறு பிரிட்டிஷ் அரசுக்கு ஒருவர் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார்.

முதலாம் உலகப் போர் நடந்து வந்த காலகட்டத்தில், 1917 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தின் சீஹோர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேத் ஜம்மாலால் ருதியா என்பவரிடம் பிரிட்டிஷ் அரசு 35,000 ரூபாய் கடன் வாங்கியது.

பிரிட்டிஷ் அரசுக்கு கடன் கொடுத்த விஷயம் ருதியா குடும்பத்தினருக்குத் தெரிந்திருந்தாலும், அதற்கான ஆவணங்கள் யாரிடமும் இல்லை என்பதால், 109 ஆண்டுகளாக இந்த விஷயம் கிடைப்பில் இருந்துள்ளது.

ஜம்மாலால் ருதியாவின் பேரன் விவேக் ருதியா, தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு பழைய ஆவணங்களையும் உயிலையும் ஆய்வு செய்தபோது, இந்தக் கடனுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் கிடைத்துள்ளன. முதலாம் உலகப் போரினால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, போபால் சமஸ்தானத்தின் நிர்வாகத் தேவைகளுக்காக இந்த ‘போர்க் கடன்’ வாங்கப்பட்டதாக அந்தப் பத்திரங்கள் தெரிவிக்கின்றன.

1917-ல் 35,000 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. அன்றைய தங்கத்தின் விலை 17 ரூபாய். அன்று அவர் கடனாக கொடுத்த தொகையில் கிட்டத்தட்ட 2 கிலோ தங்கம் வாங்கியிருக்க முடியும். இன்றைய காலகட்டத்தில் அவ்வளவு தங்கத்தை வாங்குவதென்பது பெரிய விஷயம்.

அந்த காலத்தில் சீஹோர் மற்றும் போபால் சமஸ்தானங்களில் மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பமாக ருதியா குடும்பம் விளங்கியது. இன்றும் சீஹோர் நகரின் 20 முதல் 30 சதவீத குடியிருப்புகள் இந்தக் குடும்பத்திற்குச் சொந்தமான நிலங்களில்தான் அமைந்துள்ளன.

ஒரு நாடு, தான் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியது சர்வதேச சட்டப்படி கட்டாயம் என்ற அடிப்படையில், கடனை திருப்பி கேட்டு பிரிட்டன் அரசுக்கு சட்ட ரீதியான நோட்டீஸ் அனுப்ப ருதியா குடும்பத்தினர் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Posts