ஆப்கானிஸ்தான் முழுவதும் செஸ் விளையாட்டுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தாலிபான்கள், கடுமையான இஸ்லாமிய சட்டங்களையும் விதிமுறைகளையும் மக்களுக்கு தொடர்ந்து திணித்து வருகின்றனர். அந்தக் காரணமாக, இஸ்லாமிய சட்டத்தில் செஸ் விளையாட்டு “சூதாட்டத்தின் தொடக்கம்” எனக் கூறி, அதனை தடை செய்துள்ளது அந்த நாட்டு அரசு.
ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானில் பிரபலமான விளையாட்டாக இருந்த செஸ், சமீப ஆண்டுகளில் மீண்டும் வளர தொடங்கியது. தாலிபானின் சமீபத்திய நடவடிக்கைகள், இஸ்லாமிய சட்டங்களை கூறி மக்களை கட்டுப்படுத்தும் முயற்சியாகும்.
“இஸ்லாமிய ஷரியத்தில் செஸ் விளையாட்டு சூதாட்டத்திற்கான ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது, இந்த விளையாட்டில் மத ரீதியான பரிசீலனைகள் உள்ளன. இந்த பரிசீலனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்பதை தாலிபான்கள் தடை செய்ததற்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், இன்றுவரை எந்த மாற்றமும் அமலாக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தற்போது செஸ் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் மக்களில் சுதந்திரத்தின் மீதான தாலிபான்களின் அதிகரித்து வரும் கட்டுப்பாடுகளுக்கு செஸ் விளையாட்டு தடை மற்றொரு எடுத்துக்காட்டு. இந்த கட்டுப்பாடுகள் விளையாட்டுகளுக்கு அப்பால் கலாச்சார மற்றும் கல்வி நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது, இது ஆப்கானிஸ்தான் சமூகத்தை ஆழமாக பாதிக்கிறது. இந்தக் கொள்கைகள் எவ்வளவு காலம் நீடிக்கும்? சர்வதேச அழுத்தம் இந்த முடிவுகளில் சிலவற்றை மாற்றுமா? என்ற கேள்விகள் தற்போது அந்த நாட்டுப் பொதுமக்களிடையே எழுந்துள்ளன.









