“சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் முக்கிய துறைகளில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைளை அமெரிக்க அரசு தொடங்கும்” என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், உயர்கல்வியில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை மீதான கட்டுப்பாட்டை அதிகபடுத்தும் டிரம்ப் நிர்வாகத்தின் முயற்சி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களில் 31% பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் பலர் உலகின் மிகவும் தீவிரமயமாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிட்ட டிரம்ப், அவர்களை “பிரச்சினைக்குரியவர்கள்” என கடுமையாக சாடியிருந்தார்.
“அவர்களால் ஷாப்பிங் மையங்கள் வெடிப்பதும், கலவரங்கள் ஏற்படுவதும், நாடு சீர்குலைவதையும் எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஹார்வார்ட் மற்றும் பிற கல்வி நிலையங்களில் பயில விரும்பும் மாணவர்கள் எங்களிடமும் உள்ளனர். ஆனால் வெளிநாட்டு மாணவர்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுவதால் எங்கள் மாணவர்களால் உள்ளே செல்ல முடிவதில்லை” என பேசியிருந்தார் டிரம்ப்.
அப்படிப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 31%லிருந்து 15%மாக குறைக்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் கூறும் வகையில், ஹார்வர்டில் பயிலும் மாணவர்களில், பிற நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் வெறும் கால் பங்குதான் என குறிப்பிட்டுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். மேலும்,வெளிநாட்டு மாணவர்களின் முழு நடத்தை பதிவுகளையும் ஒப்படைத்தல், மாணவர்களை தணிக்கை செய்தல் போன்ற அரசின் பல கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ளது ஹார்வர்ட் பல்கலைக்கழகம்.

இந்நிலையில், நேற்று “சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் முக்கிய துறைகளில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கைளை அமெரிக்க அரசு தொடங்கும்” என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ பதிவிட்டுள்ளது வெளிநாட்டு மாணவர்களின் மீதான கெடுபிடிகளை தீவிரமாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது சீன மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தணிக்கை நிறைவுபெற்ற பின்னர், டிரம்ப் நிர்வாகத்தின் பார்வை அடுத்தது எந்த நாட்டு மாணவர்களின் மீது விழும் என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது.
இதற்கு முன்னமே, கடந்த 27ம் தேதி “வகுப்புகளை தவிர்த்தாலோ, முறையாக தெரிவிக்காமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினாலோ எதிர்காலத்தில் விசா பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும்” இந்திய மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை அமெரிக்க அரசு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.









