கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களில், சிலருக்கு சவை உணர்வு திறன் இழப்பு, நுகர்வுத்திறன் இழப்பு, நரம்பியல் சிக்கல்கள் உட்பட சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது ஏற்கனவே நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் நிரூபனம் ஆகியுள்ளது. இந்நிலையில், பிரான்சில் இருக்கும் பாரிஸ் நகர பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிர்ச்சிதரக்கூடிய ஒரு தகவல் தெரியவந்துள்ளது.
ஒருவருக்கு வயதாகும்போது, உடலில் இருக்கும் மற்ற உறுப்புகள் போலவே உடம்பில் ஓடும் ரத்த குழாய்களும் முதிர்ச்சியடையும். ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகியிருப்பவர்களில் சிலருக்கு, ரத்த குழாய்கள் முதர்ச்சி அடைவது இயல்புக்கு மாறாக இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றின் பக்கவிளைவாக, ரத்த குழாய்கள் வேகமாக வயதடைந்துள்ளது தெரியவந்துள்ளது. உதரணமாக, 30 வயதுடைய நபரின் ரத்த குழாய்களானது 35 வயதுடைய நபருடையது போல முதிர்ச்சியடைந்துள்ளது.

கொரோனா தொற்று ஏற்படும்போது ரத்த குழாய்களின் உட்சுவர் பாதிக்கப்படுவதால், இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த குழாய்கள் முதிர்ச்சியடையும் வேகமானது ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக இருக்கிறது. இந்த வேறுபாட்டிற்கு காரணம்,பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் நோய் தொற்றுகளுக்கு தீவிரமாக செயலாற்றுவதுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், அஸ்திரேலியா, ஃபிரான்ஸ் உட்பட 16 நாடுகளிலிருந்து, 2,390 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், தொற்று ஏற்படாதவர்கள் என இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ரத்த குழாய்கள் வேகமாக முதிர்ச்சியடைவதனால், இளம் வயதிலேயே ஆஸ்துமா, ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க,கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் மருத்துவரிடம் சென்று ரத்த குழாயின் தன்மை குறித்து பரிசோதனை செய்துபார்த்து, ஏதேனும் பாதிப்பு இருந்தால் உரிய மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.









