பொது

இரவில் பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாதா? சட்டம் சொல்வதென்ன?

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக பிரதே பரிசோதனை செய்யப்பட்டது சட்ட மீறல் என்ற கருத்துக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் சிலரின் உடல்கள் இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பல விமர்சனங்களை எழுப்பியது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் உடல்களை இரவோடு இரவாக எதற்காக பிரேதப் பரிசோதனை செய்தார்கள்? பகலில் தான் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும், இரவில் செய்யக்கூடாது என்று விதிகள் இருப்பதாக இணையத்தில் த.வெ.க. ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி பல பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்த கேள்விக்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேதப் பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல் பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது’ என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.

2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேதப் பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts