இந்தியாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களுக்கும் மத்திய அரசின் கீழ் செயல்படும் திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) சென்சார் சான்றிதழ் வழங்குகிறது. இந்தச் சான்றிதழ் கிடைத்தால்தான் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாக முடியும். இந்தச் சென்சார் சான்றிதழில் ஒரு முக்கிய மாற்றத்தை செய்துள்ளது CBFC.
பொதுவாக, ஒரு படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் 48 நாட்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கும். இதன் காரணமாக, பல படங்கள் அறிவிக்கப்பட்ட வெளியீட்டு தேதியில் வெளியாக முடியாமல் போய் இருக்கு. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வந்தனர்.
உதாரணமாக, சமீபத்தில் டிரெண்டாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல், வழக்கு நடைபெற்று வருகிறது. இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் அரசியல் ரீதியான தாக்கம் இருந்தாலும், இதன் மூலம் படத் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் பெரிய இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாகியிருந்தால், தமிழகத்தில் மட்டும் ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை வசூல் செய்திருக்கும், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துடன் மோதியிருந்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாமல், ‘ஜனநாயகன்’ தள்ளிப்போனதால் அடுத்தடுத்து வெளியாகவிருந்த பல படங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற சுழலில், திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கும் கால அவகாசத்தை 48 நாட்களிலிருந்து 18 நாட்களாக குறைத்துள்ளதாக CBFC அறிவித்துள்ளது. அதேபோல், குறும்படங்களுக்கு 3 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தாமதமான வெளியீட்டால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, விண்ணப்பத்தை பரிசீலிக்க 7 நாட்கள், ஆய்வுக் குழுவை அமைக்க 15 நாட்கள், சான்றிதழ் வழங்க 5 நாட்கள் என அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். தற்போது இந்த கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளதால், திரைப்படங்கள் அறிவிக்கப்பட்ட தேதியிலேயே வெளியாக அதிக வாய்ப்பு இருக்கு. ரசிகர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் இனி இருக்காது என பலர் தெரிவித்து வருகின்றனர்.









