கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசியால், நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் வருவதாக, இந்தியாவிலேயே நரம்பியல் சிகிச்சையில் சிறந்து விளங்கும் மத்திய அரசு நிறுவனமான தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடகவின் ஹாசன் மாவட்டத்தில், கடந்த 40 நாட்களில் 45 வயதுக்குட்பட்ட 23 பேர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக 10 மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழு ஆய்வு செய்து, கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளதாக, கர்நாடக அரசிடம் அறிக்கை சமர்பித்திருந்து. இந்நிலையில், இப்போது பெங்கலூருவில் இருக்கும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம், கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசியால், நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் வருவதாக வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகள் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
NIMHANS நரம்பியல் பேராசிரியர் டாக்டர். நேத்ரவதி தலைமையில், கொரோனா முதல் அலை மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட காலகட்டத்திலிருந்து நரம்பியல் தொடர்பான ஆய்வுகள் நடந்து வந்தன. 2020ம் ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் வரை, நரம்பியல் சிக்கல் கொண்ட 3200 நபர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 120 நபர்களுக்கு (3.75%) ஏற்பட்டிருந்த நரம்பியல் பிரச்சனைகள், கொரோனா தொற்றுடன் தொடர்புடையதாக இருந்திருக்கிறது.

வலிப்பு, வாசனை திறன் இழப்பு நிலை(anosmia), மனநிலை தடுமாற்றம் (altered consciousness) ஆகிய நரம்பியல் சிக்கல்கள் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பொதுவாக ஏற்பட்டுள்ளன. தன்னுடல் தாக்க நோய் (autoimmune), ரத்தம் உறைதலில் சிக்கல் (thrombotic complications), உடலில் ஆக்ஜிசன் பற்றாக்குறை (hypoxia) போன்ற சிக்கலான பிரச்சனைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஏற்பட்டிருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகும் பலருக்கு இந்த சிக்கல்கள் தொடர்வதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 நாட்களில் நரம்பியல் சிக்கல் ஏற்பட்ட 116 நபர்களிடம், 2021 மே முதல் டிசம்பர் வரை ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 29 பேருக்கு மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ‘தடுப்பூசிக்குப் பிந்தைய டீமைலினேஷன்’ (demyelination) சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 29 பேரில் 27 பேர் கோவிஷீல்ட் (Covishield) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் 2 பேர் கோவாக்ஷின் (Covaxin) தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 நாட்களுக்குள்ளாகவே இந்த உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன. முறையான சிக்சைக்கு பின் இவர்களில் சிலருக்கு இந்த நரம்பியல் சிக்கல்கள் சரியாகிவிட்டதென இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசியால், நரம்பியல் சிக்கல்கள் வருவது அரிதானது என்றாலும், உடல்நலனில் தொடர் கண்காணிப்பு அவசியம் என்று இந்த NIMHANS ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.









