பொது

நம்மை சுற்றி ஒரு ஒளி வட்டமா? ஆய்வில் சுவாரசிய தகவல்!

அனைத்து உயிரினங்களில் இருந்தும் மனித கண்ணுக்கு புலப்படாத ஒளி பிரகாசித்துக் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மிகப் பெரிய மகான்கள் உடலில் இருந்து ஒளி பிரகாசிப்பதாக பலருக்கு நம்பிக்கை உண்டு. திரைப்படங்களில் கூட கடவுளுக்கும், மகான்களுக்கும் ஒளி வட்டம் இருப்பது போல கிராபிக் காட்சிகள் வருவதுண்டு.ஆனால் உண்மையிலேயே அனைத்து உயிரினமும், தான் இறந்தால் மறைந்து போகும் ஒருவித சிறப்புப் பிரகாசத்தை உமிழ்வதாக கனடாவின் கால்கரி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எல்லா உயிரினங்களின் உடம்பிலும், பலவிதமான வேதியியல் வினைகள் (chemical reaction) நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த வேதியியல் வினைகள் நடக்கும்போது, ஒவ்வொரு உயிரினமும் ஃபோட்டான் (Photon) துகள்களை வெளியிடுகிறது. அவை 200லிருந்து 1000 நானோ மீட்டர் அலைவரிசையை கொண்டிருப்பதால், மனித கண்களுக்குத் தெரிவதில்லை.இந்த தன்மையை விஞ்ஞானிகள் அல்ட்ராவீக் ஃபோட்டான் உமிழ்வு (Ultraweak Photon Emission) என்கிறார்கள்.

இயல்பாகவே சிலவகை பாசிகளும், சில பூச்சிகளும் ஒளிரும் தன்மை கொண்டவையாக இருக்கும்.அவை உயிர் ஒளிர்வு (Bioluminescence) உயிரினங்கள் ஆகும். ஆனால், இந்த UPE ஒளி அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும், இது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த UPE ஒளியானது, ஒரு உயிரினம் இறந்த பின்னரும் சில நிமிடங்கள் தொடர்ந்து இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எலிகள் மற்றும் செடிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வெளிப்புற வெப்ப நிலைக்கு ஏற்ப ஒளியின் செறிவு மாறுபடுவது தெரியவந்துள்ளது. எலிகளை நெருக்கடியான சூழலுக்கு உட்படுத்தியபோது அதேபோல ஒளிச்செறிவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உயிரியல் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இது வருங்காலத்தில் மருத்துவத் துறையில் உபயோகமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts